தெலுங்கு திரைப்படமான ‘கோபாலா.. கோபாலா’, இந்துக் களின் மனம் புண்படும் வகையில் உள்ளதாக புகார் செய்யப்பட்டதன் பேரில் ஹைதராபாத் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே இந்தத் திரைப்படம் வெளியிடப்பட்ட திரையரங்கம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
தெலுங்கு முன்னனி நடிகர் களான வெங்கடேஷ், பவன் கல்யாண் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இத்திரைப்படம் இருவரின் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இத்திரைப்படம், நேற்று ஆந்திரா, தெலங்கானா, தமிழகம், கர்நாடகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் வெளியிடப்பட்டது.
இந்தியில் வெளியான ‘ஓ மை காட்’ திரைப்படத்தின் ரீ மேக்கான இத்திரைப்படத்தில் வரும் காட்சிகள் இந்துக்களின் மனம் புண்படும்படி உள்ளதாக நேற்று ஹைதராபாத்தைச் சேர்ந்த ரகுநாத ராவ் என்பவர் சைஃபா பாத் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம் சாட்டப்பல் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் இத்திரைப்படம் வெளியிடப்பட்டது. இது இந்துக்களின் மனம் புண்படும் வகையில் இருப்பதாகக் கூறி திரையரங்கில் இருந்த நாற்காலிகள், மின் விசிறிகள் மற்றும் கண்ணாடிகளை உடைத்து துவம்சம் செய்தனர். இவர்களை போலீஸார் கைது செய்தனர்.