தென்னிந்திய சினிமா

கத்தி ரீமேக்கில் நடிக்கப் போவதில்லை: நடிகர் மகேஷ் பாபு

செய்திப்பிரிவு

'கத்தி' படம் மிகவும் பிடித்திருந்தது. ஆனால், அதன் ரீமேக்கில் தான் நடிக்கப் போவதில்லை என்று தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு தெரிவித்தார்.

ஆந்திராவில் புயல் பாதித்த இடங்களுக்கு உதவி செய்யும் நோக்கில், தெலுங்கு திரையுலகினர் ஒன்றிணைந்து Memu Saitham என்ற தலைப்பில் நடிகர், நடிகைகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள், கபடி மற்றும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன.

அந்நிகழ்ச்சியில் நடிகர் மகேஷ் பாபு மற்றும் இயக்குநர் த்ரிவிக்ரம் ஆகியோரை நடிகை சமந்தா பேட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் "சமீபத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது?" என்று மகேஷ்பாபுவிடம் சமந்தா கேட்டார்.

"’கத்தி’ மிகவும் பிடித்திருந்தது. ஆனால் நான் ரீமேக் படங்களில் நடிக்க மாட்டேன். அப்படங்களை அதே சிறப்போடு மீண்டும் எடுக்க முடியுமா என்ற சந்தேகம் எனக்கு உண்டு. 'கத்தி' என்றால் விஜய் தான் நினைவுக்கு வருகிறார். எனவே அந்தப் படத்தில் நான் நடிக்க சென்றால், நான் என்ன செய்தாலும் அது விஜய் செய்வது போலவே இருக்கும். அதில் நான் சிக்க விரும்பவில்லை" என்று மகேஷ் பாபு தெரிவித்தார்.

"விஜய் குறித்து சொல்லுங்கள்" என்று சமந்தாவிடம் மகேஷ்பாபு கேட்டார். அதற்கு, "கேமிராவிற்கு முன் பின் என இரண்டு விஜய்யை நீங்கள் படப்பிடிப்பில் பார்க்கலாம். கேமிரா ஆன் செய்துவிட்டால், அப்படியே மாறிவிடுவார். இரண்டு மனிதர்களை போல படப்பிடிப்பில் இருப்பார் விஜய். ஷாட் இல்லை என்றால் 2 மணி நேரம் கூட அமைதியாக உட்கார்ந்திருப்பார். ஷாட் ரெடி, ஆக்‌ஷன் என்று கூறியவுடன் அப்படியே மாறிவிடுவார். SPLIT PERSONALITY இருக்கும் என்று நினைக்கிறேன்" என்று சமந்தா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT