தன் திரை வாழ்க்கையில் 5 வருடங்களை ‘பாகுபலி’க்காக அர்ப்பணித்த நடிகர் பிரபாஸ், தனது அடுத்த படமான ‘சாஹோ’வின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார்.
‘பாகுபலி’ திரைப்படம் மூலம் தேசிய அளவில் புகழ்பெற்றவர் நடிகர் பிரபாஸ். ஆனால் ‘பாகுபலி’ படத்தின் 2 பாகங்களின் படப்பிடிப்புக்காக மட்டுமே 5 வருடங்களை அவர் தந்திருந்தார். இந்த 5 வருடங்களில் அவர் வேறெந்த படத்திலும் நடிக்கவில்லை. ‘பாகுபலி 2’ வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் தற்போது தனது அடுத்த படத்தில் கவனத்தை செலுத்தி வருகிறார்.
அடுத்த மூன்று வாரங்கள் இடைவெளி இல்லாமல், தொடர்ந்து இந்த படப்பிடிப்பு நடக்கவுள்ளது. சுஜீத் இயக்கும் இந்தப் படத்தில் ஷ்ரதா கபூர் நாயகியாக நடிக்கிறார். இந்தி, தமிழ், மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில், ரூ.150 கோடி பட்ஜெட்டில் ஒரே நேரத்தில் ‘சாஹோ’ உருவாகிறது. முன்னதாக, படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்கே அதிக பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் சுஜீத் கூறியது குறிப்பிடத்தக்கது.
‘டை ஹார்ட்’, ‘ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்’ ஆகிய ஹாலிவுட் படங்களின் சண்டைக் காட்சிகளில் வேலை செய்த கென்னி பேட்ஸ், 'சாஹோ' படத்தின் சண்டைக் காட்சிகளின் மேற்பார்வையை கவனிக்கவுள்ளார்.