போதைப் பொருள் விவகாரத்தில் தனது மேலாளர் ரோனி கைது செய்யப்பட்டு இருப்பது குறித்து காஜல் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் போதைப்பொருள் சிக்கிய விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாகி வருகிறது. இதில் பள்ளி மாணவர்களுக்கு விநியோகம் செய்யும் கும்பலைச் சேர்ந்த 19 பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் கொடுத்த தகவலின்படி, இது தொடர்பாக தெலுங்கு திரைத்துறையைச் சேர்ந்த 12 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதில் இயக்குநர் பூரிஜெகன்நாத், நடிகர்கள் தருண், சுப்பராஜு, நவ்தீப் மற்றும் ஒளிப்பதிவாளர் ஷியாம் கே.நாயுடு ஆகியோரிடம் கலால் புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஏற்கெனவே விசாரணை நடத்தியுள்ளனர்.
இதனிடையே நேற்று நடிகை காஜல் அகர்வாலின் மேலாளர் ரோனி என்பவரின் வீட்டில் கலால் துறையினர் அதிரடி சோதனை நடத்தி, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். இதையடுத்து ரோனி கைது செய்யப்பட்டார்.
தன்னுடைய மேலாளர் கைது செய்யப்பட்டு இருப்பது குறித்து காஜல் அகர்வால் வெளியிட்டுள்ள ட்விட்டர் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ரோனி சம்பந்தப்பட்ட விஷயங்கள் கேள்விப்பட்டு அதிர்ச்சியும், திகைப்பும் அடைந்துள்ளேன். இதை நான் சுத்தமாக ஆதரிக்கவில்லை. சமூக ஆரோக்கியத்தை சீரழிக்கும் எந்த செயலுக்கும் நான் ஆதரவில்லை.
எனக்காக வேலை செய்பவர்கள் மீது நான் அக்கறையோடு இருப்பேன். ஆனால் அதற்காக அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, தேர்வுகளை என்னால் கட்டுப்பட்டுத்த முடியாது. எனது தொழில்முறை வாழ்க்கையை எப்போதுமே எனது குடும்பத்தினர் நிர்வகித்து வருகின்றனர்.
துறையில் இருக்கும் மற்றவர்களுடன் எனக்கு சுமுகமான, தொழில்முறை உறவு மட்டுமே உள்ளது. இணைந்து வேலை செய்துவிட்டு அவரவர்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கு திரும்பியவுடன் அவர்கள் எங்கு இருக்கிறார்கள், அவர்கள் நடவடிக்கை என்ன என்பது பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது.
இவ்வாறு காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.