'பாகுபலி' படத்தில் ஸ்ரீதேவி நடிக்காதது குறித்து தெரிவித்த கருத்துகளுக்கு, வருத்தம் தெரிவித்துள்ளார் இயக்குநர் ராஜமெளலி.
'பாகுபலி' படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த சிவகாமி கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ரீதேவியை முதலில் அணுகியதாகவும், அவர் பல நிபந்தனைகள் விதித்ததால் அவரை நடிக்க வைக்க முடியவில்லை என்றும் இயக்குநர் ராஜமௌலி அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
அதற்கு ஸ்ரீதேவி அளித்த விளக்கத்தில், "ராஜமௌலியின் பேட்டி ஒன்றை பார்த்து அதிர்ச்சியுற்றேன். காயமுற்றேன். அவர் அமைதியானவர், கண்ணியமானவர் என கேள்விப்பட்டிருக்கிறேன். அவரது நான் ஈ படம் பார்த்துள்ளேன். அவருடன் பணியாற்றுவதில் எனக்கு மகிழ்ச்சியே. அற்புதமான கலைஞர் அவர். ஆனால் அவர் இந்த சர்ச்சை குறித்து பேசிய விதம் என்னை வருத்தப்படச் செய்தது.என்னுடைய நிபந்தனைகள் என கூறுவது அனைத்தும் பொய்யே. அதற்கு ஆதாரமும் கிடையாது" என்று விளக்கமளித்தார்.
இந்நிலையில், ஸ்ரீதேவி குறித்து பேசிய கருத்துகளுக்கு ராஜமெளலி, "யார் சொல்வதை நம்புவது என்பது மக்களின் முடிவு. ஆனால் ஒன்று நிச்சயம். அதை நான் பொதுவில் விவாதித்திருக்கக் கூடாது. அது தவறு. அதற்கு வருந்துகிறேன்.
தென்னக சினிமாத் துறையின் பிரதிநிதியாக பல வருடங்கள் பாலிவுட்டில் இருக்கும் ஸ்ரீதேவி அவர்கள் மீது எனக்கு அதிக மரியாதை இருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துகள். மாம் படம் பெரிய வெற்றியடைய வாழ்த்துகிறேன். ட்ரைலர் சுவாரசியமாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார் ராஜமெளலி. இதனால் 'பாகுபலி' தொடர்பாக நிலவிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.