மறைந்த பிரபல நடிகை சாவித்ரியின் வாழ்க்கையைச் சொல்லும் 'மஹாநதி' படத்தில், துல்கர் சல்மான், நடிகர் ஜெமினி கணேசனை பிரதிபலிக்குமாறு நடிக்க மாட்டார் என இயக்குநர் நாக் அஷ்வின் தெரிவித்துள்ளார். மேலும், உருவ ஒற்றுமையைத் தாண்டியே அந்த கதாபாத்திரம் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
மறைந்த பிரபல தென்னிந்திய நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் 'மஹாநதி' என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது. துல்கர் சல்மானின் முதல் நேரடி தெலுங்குப் படம் இது. நிஜத்தில் நடிகர் ஜெமினி கணேசனின் கதாபாத்திரத்தை, படத்தில் துல்கர் சலமான் நடிக்கவிருப்பதாக செய்திகள் வந்தன.
இதுகுறித்து பேசிய இயக்குநர் நாக் அஷ்வின், "நடிகர் ஜெமினி கணேசன், இன்று, அவரது நடிப்புக்காகவும், ஆளுமைக்காகவும் எப்படி பார்க்கப்படுகிறார் என்பதை ஒத்தே துல்கரின் கதாபாத்திரம் இருக்கும். உருவ ஒற்றுமையைத் தாண்டி அது வடிவமைக்கப்பட்டுள்ளது. உணர்வுப்பூர்வ அளவில் அவரைப் பற்றி புரிந்துகொண்டது படத்தில் இருக்கும்.
துல்கர் போன்ற பிரபல நடிகர் இந்த கதாபாத்திரத்தை ஏற்றுக்கொள்ள நிறைய தைரியம் வேண்டும். சில நடிகர்கள் அவர்களது சந்தை, வியாபாரம், நேரம் என மற்ற காரணிகளைப் பார்த்தே ஒப்புக்கொள்வார்கள். துல்கர், தனது கதாபாத்திரத்தைத் தாண்டி, கதைக்கும், படத்துக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார் என்பது அற்புதமாக இருக்கிறது.
அவரை வைத்து எடுத்த முதல் காட்சி இன்னும் ஞாபகம் இருக்கிறது. நீளமான வசனம் பேச வேண்டும் அதை ஓரே டேக்கில் சரியாக பேசி அசத்தினார். படக்குழு அனைவரும் ஆச்சரியப்பட்டோம். அனைவரும் அவருக்காக கைதட்டினோம்" என்றார்.
இந்த படத்தில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சமந்தா கதாபாத்திரத்தின் பார்வையில் கதை சொல்லப்படவுள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அனூப் ரூபன்ஸ் இசையமைக்கிறார்.