கேரள காவல்துறைக்கு நன்றி, நீதி வெல்லட்டும் என்று பாவனா கடத்தல் விவகாரத்தில் ரம்யா நம்பீசன் தெரிவித்துள்ளார்.
நடிகை பாவனா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் திலீப், செவ்வாய்க்கிழமை அன்று அங்கமாலியில் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
வழக்கு தொடர்பாக நடிகை காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்த போலீஸார் பலமுறை முயன்றனர். ஆனால் அவரும் அவரது தாயாரும் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. அடுத்ததாக காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்தப்பட்டு அவரும் கைது செய்யப்படக் கூடும் என்று கேரள காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
திலீப் கைது செய்யப்பட்டிருப்பதற்கு பாவனா குடும்பத்தினர், "இந்தப் பிரச்சினையில் இறுதியில் உண்மை வென்றுள்ளதில் மகிழ்ச்சி. ஆரம்பத்திலிருந்தே வழக்கு விசாரணைக்கு ஏற்பட்ட பல்வேறு குறுக்கீடுகளுக்கு இடையேயும் உண்மை வெற்றி பெற இறைவனே துணை நின்றிருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் பாவனாவின் நெருங்கிய தோழியான ரம்யா நம்பீசன், "வாய்மையே வெல்லும்! தோழியுடன் கடைசி வரை உடன் இருப்போம். கேரள காவல்துறை அதிகாரிகளுக்கு பெரிய சல்யூட். நீதி வெல்லட்டும்!" என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.