இயக்குநர் கே. விஸ்வநாத்துக்கு தாதா சாஹேப் பால்கே விருது வழங்குவதால், அந்த விருது முழுமை பெற்றுள்ளதாக நடிகர் சிரஞ்சீவி தெரிவித்தார்.
பிரபல இயக்குநர், நடிகர் கே.விஸ்வநாத்துக்கு இந்திய திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதை வரும் மே மாதம் 3-ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் வழங்க உள்ளார். இந்த விருது அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இயக்குநர் கே. விஸ்வநாத்துக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி திரையுல பிரமுகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி நேற்று இயக்குநர் கே. விஸ்வநாத்தை, சந்தித்து பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
இயக்குநர் கே. விஸ்நாத்துக்கு தாதா சாஹேப் பால்கே விருது கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இவ்விருது அவருக்கு எப்போதோ வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆயினும் இதற்கான காரணங்களை தேடாமல், இப்போது சரியான தருணத்தில் இவ்விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
அவருக்கு வழங்கப்படுவதால், அந்த விருது முழுமையடைந்திருப்பதாக உணர்கிறேன். எனக்கு அவர் இயக்குநர் என்கிற முறையில் மட்டுமல்லாது நல்ல குடும்ப நண்பராவார். அவருக்கு கிடைத்த இந்த விருதால் தெலுங்கு திரையுலம் பெருமை அடைந்துள்ளது.
இவ்வாறு நடிகர் சிரஞ்சீவி கூறினார்.