‘பாகுபலி-2’ திரைப்படம் திரையிடப்பட்ட முதல் நாளில் ரூ. 125 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தெலுங்கு திரைப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரபாஸ், ராணா, சத்யராஜ், நாசர், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் நடித்து, ராஜமவுலி இயக்கத்தில் தயாராகியுள்ள ‘பாகுபலி -2’ திரைப்படம் வெள்ளிக்கிழமை உலக மெங்கும் சுமார் 9 ஆயிரம் திரையரங்கு களில் வெளியானது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான இத்திரைப்படம் இந்தியத் திரைப்பட சாதனைகளை முறியடித்து வருவதாகக் கூறப்படுகிறது. ‘பாகுபலி-2’ திரைப்படம் ஆந்திராவில் தினமும் 6 காட்சிகள், தெலங்கானாவில் தினமும் 5 காட்சிகளாக திரையிடப்பட்டுள்ளன. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இத்திரைப்படம் வெளியானது. இதில் முதல் நாளே ரூ. 125 கோடிக்கும் அதிகமாக வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. ரூ. 480 கோடியில் தயாரிக்கப்பட்டு வெளியான இந்தத் திரைப்படம், திரையிடப்பட்ட முதல் நாளிலேயே வசூலில் சாதனை படைத்துள் ளது. முதல் நாள் வசூல் ஆந்திரா, தெலங் கானாவில் ரூ. 55 கோடி, ஹிந்தியில் ரூ. 38 கோடி, கர்நாடகாவில் ரூ. 12 கோடி, தமிழ்நாட்டில் ரூ. 11 கோடி, கேரளாவில் ரூ. 9 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளிலும் இதன் வசூலை கணக்கிட்டு பார்த்தால் ரூ. 125 கோடியை முதல் நாளே கடந்ததாக தெலுங்கு பட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆதலால் இத்திரைப்படம் விரைவில் ரூ. 1,000 கோடி வசூலை கடக்கும் எனக் கூறப்படுகிறது.