இந்த ஆண்டில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக ‘பாகுபலி 2’ உள்ளது. வரும் 28-ம் தேதி வெளியாகவுள்ள இப்படம், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. இதன் மூலம் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் படம் என்ற சாதனையை இப்படம் படைத்துள்ளது. மேலும் அமெரிக்க நாடுகளில் அதிக தியேட்டர்களில் ரிலீஸாகும் (1000 தியேட்டர்கள்) படம் என்ற புதிய சாதனையையும் இப்படம் படைத்துள்ளது. இந்நிலையில் ‘பாகுபலி’ படத்தை மையமாக வைத்து வெளியான புத்தகங்களை தொலைக்காட்சி தொடர்களாக எடுக்கவும் திட்டம் இருப்பதாக அதன் தயாரிப்பாளர் ஷோபு யாரலகட்டா தெரிவித்துள்ளார்.
450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான ‘பாகுபலி 2’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே, சாட்டிலைட்ஸ் உரிமம், வெளியீட்டு உரிமம் ஆகியவற்றின் மூலம் 500 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது. முதல் நாளிலேயே இப்படம் 60 கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.