தென்னிந்திய சினிமா

பாகுபலியில் நடிக்க ரூ.10 கோடி கேட்டேனா?- நடிகை ஸ்ரீதேவி விளக்கம்

கார்த்திக் கிருஷ்ணா

பாகுபலி இயக்குநர் ராஜமௌலி பேசியது தன்னை காயப்படுத்தியது என நடிகை ஸ்ரீதேவி கூறியுள்ளார்.

பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி வசூல் ரீதியில் பல சாதனைகள் படைத்தன. இந்த படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளன. ரம்யா கிருஷ்ணன் நடித்த சிவகாமி கதாபாத்திரம் படத்துக்கு வலு சேர்த்ததோடு ரம்யா கிருஷ்ணனுக்கும் புகழை ஈட்டித் தந்தது.

ஆரம்பத்தில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ரீதேவியை அணுகியதாகவும், அவர் பல நிபந்தனைகள் விதித்ததால் அவரை நடிக்க வைக்க முடியவில்லை என்றும் இயக்குநர் ராஜமௌலி கூறியிருந்தார். தற்போது இதுகுறித்து நடிகை ஸ்ரீதேவி விளக்கமளித்துள்ளார்.

தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றுக்கு ஸ்ரீதேவி அளித்த பேட்டியில் அவர் பேசியதாவது:

"பல காரணங்களால், பல படங்களில் நான் நடிக்காமல் இருந்திருக்கிறேன். ஆனால் பாகுபலி பற்றி மட்டும் பேசுவது ஏன் என தெரியவில்லை. அதுகுறித்து பேசுவதை நீண்ட நாட்களாக தவிர்த்து வந்திருக்கிறேன். ஆனால் இப்போது அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். நான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க 10 கோடி ரூபாய் கேட்டதாகவும், ஓட்டலில் ஒரு தளம் முழுவதும் இருக்கும் அறைகளையும், 10 கூடுதல் விமான டிக்கெட்டுகளையும் கேட்டதாகவும் கூறுகிறார்கள்.

நான் இந்தத் துறையில் 50 வருடங்களாக இருக்கிறேன். 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். இப்படியான நிபந்தனைகள் விதித்திருந்தால் இவ்வளவு நாள் தாக்குப்பிடித்திருப்பேனா? அப்படி இருந்திருந்தால் என்றோ என்னை வீட்டுக்கு அனுப்பியிருப்பார்கள். ஆனால் என்னைப் பற்றி அப்படியான செய்திகளை கேட்கும் போது மனது காயப்படுகிறது. தயாரிப்பாளர் தவறாக ராஜமௌலியிடம் சொல்லியிருக்கிறாரா, அல்லது வேறு வகையான தவறான புரிதலா என எனக்குத் தெரியவில்லை. அதுகுறித்து பொது தளத்தில் பேசுவது நன்றாக இருக்காது என நினைக்கிறேன்.

இந்த சர்ச்சையை நான் எனது தலையில் ஏற்றிக்கொள்ளவில்லை. ஆனால் ராஜமௌலியின் பேட்டி ஒன்றை பார்த்து அதிர்ச்சியுற்றேன். காயமுற்றேன். அவர் அமைதியானவர், கண்ணியமானவர் என கேள்விப்பட்டிருக்கிறேன். அவரது நான் ஈ படம் பார்த்துள்ளேன். அவருடன் பணியாற்றுவதில் எனக்கு மகிழ்ச்சியே. அற்புதமான கலைஞர் அவர். ஆனால் அவர் இந்த சர்ச்சை குறித்து பேசிய விதம் என்னை வருத்தப்படச் செய்தது.

என்னுடைய நிபந்தனைகள் என கூறுவது அனைத்தும் பொய்யே. அதற்கு ஆதாரமும் கிடையாது. எனது கணவரும் ஒரு தயாரிப்பாளர் தான். அவருக்கு ஒரு தயாரிப்பாளரின் பிரச்சினைகள் தெரியும். அவர் அப்படியான நிபந்தனைகளை விதித்திருக்க மாட்டார்." என்று ஸ்ரீதேவி கூறியுள்ளார்.

முன்னதாக ராஜமௌலி பேட்டி ஒன்றில், ஸ்ரீதேவி இந்த படத்தில் நடிக்க மறுத்தது தங்களின் அதிர்ஷ்டமே என்று குறிப்பிட்டிருந்தார்.

SCROLL FOR NEXT