பிரபல மலையாள நடிகரான மணியன்பிள்ளை ராஜு, சுமார் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர், திருவனந்தபுரத்தில் உள்ள கிளப் ஒன்றிலிருந்து வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் தனது காரில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவருடைய கார் மீது வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று பயங்கரமாக மோதியது.
இதில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்தனர். காரின் முன் பக்கம் சேதமடைந்தது. ஆனால், மணியன்பிள்ளை ராஜு காரை நிறுத்தாமல் சென்றுவிட்டார். காயமடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சூரஜ், நிதேவ் என்பது தெரியவந்தது. விபத்து குறித்து கேரள போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை மியூசியம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த மணியன்பிள்ளை ராஜுவை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் போலீஸ் ஸ்டேஷனில் வழங்கிய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பயத்தில் காரை நிறுத்தாமல் சென்றுவிட்டேன். காயமடைந்தவர்களுக்கான மருத்துவச் செலவை ஏற்றுக்கொள்வதாகக் கூறியிருக்கிறேன்” என்றார். இந்நிலையில், சிசிடிவி காட்சியில் கார் மெதுவாகச் சாலையைக் கடக்க முயற்சிப்பதும், இரு சக்கர வாகனம் வேகமாக வந்து மோதுவதும் பதிவாகியுள்ளது.