தென்னிந்திய சினிமா

குற்றவாளிகளை சமூகத்தின் முன் நிறுத்துங்கள்: நடிகை பாவனாவுக்கு ஆதரவாக அமலா பால் பதிவு

ஸ்கிரீனன்

நடிகர் பாவனாவின் காருக்குள் புகுந்த மர்ம கும்பல், அவரை பாலியல் ரீதியில் துன்புறுத்திய சம்பவம் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இச்சம்பவம் மலையாள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக திரைத்துறையைச் சேர்ந்த பலரும் பேசி வருகின்றனர். நடிகை பாவனாவுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அமலா பால் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது,

"பெண்களின் புனிதத்தை தங்கள் விருப்பத்தின் பேரில் சீரழிக்கும் குற்றவாளிகள் இருப்பது குறித்து தெரியும் போதும் அதிர்ச்சியும், ஆத்திரமும் வருகிறது. எனது மிகப்பெரிய அச்சங்களில் இது ஒன்று, தற்போது சக நடிகை ஒருவருக்கு இது நடந்துள்ளது. ஆனால் பாவனா இதனால் உடைந்து போகக்கூடியவர் அல்ல. அந்த இரும்பு மனுஷிக்கு நனது வணக்கங்கள். இதை தைரியமாக போலீஸில் புகார் செய்து, இது போன்ற விஷயங்களில் மற்ற நடிகைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்.

நான் உங்களுக்கு ஆதரவு தருகிறேன் பாவனா. நீங்கள் இன்னும் வலிமையானவராக திரும்புவீர்கள் என எனக்குத் தெரியும். எனக்குத் தெரிந்த புத்திசாலியான, தைரியமான நபர்களில் நீங்களும் ஒருவர். அப்படிப்பட்ட உறுதியான மனிதரை யாராலும் நசுக்க முடியாது. ஊடகங்கள் சற்று பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நமது சட்ட திட்டங்கள் செய்ய முடியாததை செய்யுங்கள். இந்த செய்தியை பரப்புங்கள். ஒரு எடுத்துக்காட்டாக இருங்கள்.

நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விசாரிக்கும்போதும் இதே போன்ற பொறுப்புடன் செயல்படுங்கள். குற்றம் செய்தவர்களையும், அவர்கள் குடும்பத்தையும் அனைவரின் முன்னாலும் நிறுத்துங்கள். அப்படி செய்தால் தவறான செயலில் ஈடுபடுபவர்கள் தயங்குவார்கள், நாமும் இத்தகைய தருணங்களில் புலம்பாமல் இருக்கலாம்.

இது சமூக ஊடகத்தில் மட்டும் போராட வேண்டிய நேரமல்ல. இது பற்றி எதையாவது செய்ய இதை ஒரு பெருங்கோபமாகக் கொண்டு, நீதி கிடைக்கும் வரை போராடவேண்டும் என கேரள இளைஞர்களிடம் கேட்டுக் கொள்கிறேன். நான் எனது ஆதரவையும், துணிச்சலையும் தர தயாராக இருக்கிறேன். இது செயல்படுவதற்கான நேரம்".

SCROLL FOR NEXT