ராணா டக்குபாடி நடித்துள்ள 'காஸி' திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு டப்பிங் பதிப்புகளுக்கு சிரஞ்சீவி மற்றும் சூர்யா பின்னணிக் குரல் தருகின்றனர்.
சிரஞ்சீவி தெலுங்கு பதிப்புக்கும், சூர்யா தமிழ் பதிப்புக்கும் குரல் தர இருப்பதாக படக்குழுவை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தி பதிப்புக்கு ஏற்கெனவே அமிதாப் பச்சன் குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சங்கல்ப் ரெட்டி இயக்கியிருக்கும் இந்தப் படம், 1971-ம் ஆண்டு போரின் போது, இந்தியாவின் கிழக்கு கடல் பகுதியில், பாகிஸ்தான் நீர்மூழ்கிக் கப்பலான பிஎன்எஸ் காஸி மர்மமாக மூழ்கியதைப் பற்றியதாகும். இயக்குநர் சங்கல்ப் எழுதிய ப்ளூ ஃபிஷ் எனும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டே படமும் உருவாகியுள்ளது.
கடற்படை அதிகாரியாக ராணா நடித்துள்ளார். அகதியாக தாப்ஸி நடித்துள்ளார். இந்தப் படத்தில் நாசர், கே கே மேனன், அதுல் குல்கர்னி, மறைந்த நடிகர் ஓம்புரி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
பிவிபி சினிமா தயாரித்துள்ள இந்தப் படம் பிப்ரவரி 17-ம் தேதிவெளியாகிறது. அனில் தந்தானியுடன் இணைந்து கரண் ஜோஹார் இதன் இந்திப் பதிப்பை வெளியிடுகிறார்.