'பாகுபலி 2' படத்தின் வியாபாரத்தை 'சாஹோ' முறியடிக்கும் என்று விநியோகஸ்தர்கள் கருதுகிறார்கள்.
'பாகுபலி' படங்களுக்குப் பிறகு பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் படம் 'சாஹோ'. யுவி கிரியேஷன்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரித்துவரும் இப்படம், ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளிலும் வெளியாகவுள்ளது.ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியீடு என்று படக்குழு அறிவித்துள்ளது.
தற்போது வியாபார பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது படக்குழு. ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட விநியோக உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது இவ்விரண்டு மாநிலங்களின் உரிமையிலிருந்து மட்டும் சுமார் 100 கோடியை படக்குழு கைப்பற்றும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வெளிநாட்டு உரிமையில் இருந்து 100 கோடியை எதிர்நோக்கியுள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி என ஒட்டுமொத்தமாக விநியோக உரிமையை விற்று மட்டும் 300 கோடிக்கும் அதிகமாக படக்குழு கைப்பற்றும் என்று வியாபார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்த தகவலை வைத்துப் பார்த்தால் கண்டிப்பாக 'பாகுபலி' படங்களின் வியாபாரத்தை தாண்டி 'சாஹோ' சாதனை படைக்கும் என எதிர்பார்க்கலாம். இதன் அதிகாரப்பூர்வ வியாபார கணக்குகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'சாஹோ' பின்னணி இசையமைப்பாளர் தொடர்பான குழப்பம் சமீபத்தில் தீர்க்கப்பட்டுள்ளது. ஜிப்ரான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஷ்ரத்தா கபூர், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், மந்த்ரா பேடி, வெண்ணிலா கிஷோர், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் பிரபாஸுடன் நடித்துள்ளனர்.
'சாஹோ' பணிகளை முடித்துவிட்டு, கே.கே.ராதா கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். இதுவும் பெரும் பொருட்செலவில் தயாராகி வருகிறது