தென்னிந்திய சினிமா

பாலியல் தொழில் வழக்கில் கைதான நடிகை விவகாரத்தில் ஓர் இயக்குநரின் கோபம்!

செய்திப்பிரிவு

பாலியல் தொழில் வழக்கில் ஒரு நடிகை கைது செய்யப்பட்ட விவகாரம் மற்றும் அதையொட்டிய ஊடகங்களின் அணுகுமுறை மீதான கடும் கோபத்தை பதிவு செய்திருக்கிறார், பாலிவுட்டில் குறிப்பிட்டத்தக்க இயக்குநர்களில் ஒருவரான ஹன்சால் மேத்தா.

நடிகை ஸ்வேதா பாஸு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமானவர். 'மக்தீ' என்ற இந்திப் படத்தில் நடித்ததற்காக 2002-ஆம் ஆண்டு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதைப் பெற்றவர். 2008-ஆம் ஆண்டு, இவர் தெலுங்கில் நாயகியாக நடித்த 'கொத்த பங்காரு லோகம்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதுடன், விமர்சகர்களிடையே ஸ்வேதாவிற்கு பாராட்டையும் வாங்கித் தந்தது.

கடந்த வாரம் ஹைதராபாத் நகரில் ஸ்வேதா பாலியல் தொழில் புரிந்ததாக கைது செய்யப்பட்டார். இது, திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பணம் ஈட்டுவதற்கு வேறு வழியில்லாமல் இந்தத் தொழிலில் ஈடுபட்டதாக ஸ்வேதா கூறியதும், சமூகத்தால் அறியப்பட்ட செல்வந்தர்களும் பிரபலங்களும் அவருடன் தொடர்பு வைத்திருந்ததும் பெயர்கள் குறிப்பிடப்படாமல் செய்திகளாக கொட்டப்பட்டன.

இதனிடையே, பாலியல் தொழிலில் இருந்து மீண்டு வந்த ஸ்வேதா, தற்போது அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், 'ஷாகித்', சிட்டி லைட்ஸ்' போன்ற படங்களை இயக்கிய பாலிவுட் இயக்குநர் ஹன்சால் மேத்தா தன் அடுத்த திரைப்படத்தில் நடிக்க ஸ்வேதாவுக்கு வாய்ப்பு தர முன்வந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகள் கவனிக்கத்தக்கவை.

"நான் ஸ்வேதாவுக்கு எனது அடுத்த திரைப்படத்தில் வாய்ப்பு தர இருக்கிறேன். 'மக்தீ'யில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது.

அவரது புகைப்படங்களை பகிர்வதை நிறுத்திவிட்டு, அவருடன் சம்பந்தப்பட்ட செல்வந்தர்களின் படங்களை வெளியிடுங்கள். செல்வாக்கு இல்லாத பெண்ணை விட்டுவிட்டு, குற்றம் செய்யக் காரணமானவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டுங்கள்" என்று தனது கோபத்தைப் பதிவு செய்திருக்கிறார் ஹன்சால் மேத்தா.

SCROLL FOR NEXT