சினிமாவுக்கு திரும்ப வாய்ப்பில்லை, அரசியல் மட்டுமே என்று பவன் கல்யாண் தெரிவித்ததாக தயாரிப்பாளர் பந்த்லா கணேஷ் தெரிவித்துள்ளார்.
ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி, படுதோல்வியைத் தழுவியது. அதிலும், பவன் கல்யாண் போட்டியிட்ட 2 தொகுதிகளிலுமே தோல்வியைத் தழுவினார்.
அரசியலில் தோல்வியைத் தழுவியிருப்பதால், மீண்டும் சினிமாவில் நடிக்கவுள்ளார் பவன் கல்யாண் என்று தகவல் வெளியானது. அவரது நெருங்கிய நண்பரும், தயாரிப்பாளருமான பந்த்லா கணேஷ், பவன் கல்யாணை அணுகி கதை ஒன்றைக் கொடுத்திருப்பதாகவும் கூறப்பட்டது.
இது தொடர்பாக பந்த்லா கணேஷ் தனது ட்விட்டர் பதிவில் “எனது நிறுவனத்தில் எந்தப் படமும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஏதாவது படம் வருகிறதென்றால், அதை முதலில் நான் தான் அறிவிப்பேன்” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அளித்துள்ள பேட்டியில் பந்த்லா கணேஷ், “பவன் கல்யாணை கதையுடன் அணுகியது உண்மை தான். ஆனால், அதை அவர் நிராகரித்துவிட்டார். சினிமாவுக்கு திரும்ப இனி வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். ஆனால், தொடர்ச்சியாக அவரை சினிமாவில் நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
பந்த்லா கணேஷ் - பவன் கல்யாண் இணைப்பில் வெளியான 'கப்பர் சிங்', தெலுங்கில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படமாகும். சல்மான் கான் நடிப்பில் வெளியான 'தபாங்' படத்தின் ரீமேக்தான் 'கப்பர் சிங்' என்பது குறிப்பிடத்தக்கது