நடிகர் வருண் தேஜ் கார் விபத்தில் சிக்கினார். ஆனால் காயமின்றி தப்பியுள்ளார்.
நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நாகேந்திர பாபுவின் மகன் வருண் தேஜ். கான்ச்சே, ஃபிடா, அந்தரிக்ஷம் 9000, எஃப் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். கர்னூல் பகுதியில் தனது அடுத்த படமான வால்மீகியின் படப்பிடிப்புக்கு காரில் விரைந்துள்ளார் வருண் தேஜ்.
தெலங்கானாவின் கொத்தகோட்டா என்ற கிராமத்தின் அருகில் நெடுஞ்சாலையில் வருணின் கார் சென்று கொண்டிருந்தபோது எதிர்புறம் படு வேகமாக வந்த இன்னொரு கார் இவரது காரில் மோதியது. இதில் காரின் முன் பகுதி மோசமாக நசுங்கி சேதமானது.
அதிர்ஷ்டவசமாக, காரில் பயணித்த வருண் உள்ளிட்ட மற்றவர்களுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. "கார் விபத்தில் சிக்கினேன். நல்லவேளையாக எல்லோரும் பாதுகாப்பாக இருக்கிறோம். எந்த காயங்களும் இல்லை. உங்கள் அக்கறைக்கும் அன்புக்கும் நன்றி" என வருண் தேஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.