தென்னிந்திய சினிமா

ஃபஹத் ஃபாசிலைப் பாராட்டிய பாலிவுட் இயக்குநர்

செய்திப்பிரிவு

பாலிவுட் இயக்குநரான நிதேஷ் திவாரி, ஃபஹத் ஃபாசிலைப் பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆமிர் கான் நடிப்பில் 2016-ம் ஆண்டு இறுதியில் வெளியான இந்திப் படம் ‘தங்கல்’. இந்தியா மட்டுமின்றி, பல உலக நாடுகளிலும் திரையிடப்பட்ட இந்தப் படம், வசூலை வாரிக் குவித்தது. இந்தப் படத்தை இயக்கியவர் நிதேஷ் திவாரி. இதுதவிர, இன்னும் இரண்டு படங்களையும் இவர் இயக்கியுள்ளார்.

நிதேஷ் திவாரி, பிரபல மலையாள நடிகரான ஃபஹத் ஃபாசிலைப் பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

“ ‘கும்பளங்கி நைட்ஸ்’, மகேஷிண்டே பிரதிகாரம்’, ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘ஞான் பிரகாசன்’. ஃபஹத் ஃபாசில் எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அற்புதமாக நடித்துள்ளார்.

அவரைக் கொஞ்சம் தாமதமாகத்தான் கண்டுபிடித்தேன். ஆனால், தற்போது மிகப்பெரிய ரசிகனாகிவிட்டேன். உங்களுடைய சிறந்த படங்கள் மூலம் தயவுசெய்து தொடர்ந்து எங்களை மகிழ்ச்சிப்படுத்துங்கள் ப்ரதர்” எனத் தெரிவித்துள்ளார் நிதேஷ் திவாரி.

மேலும், ‘இந்தப் படங்களைப் பார்க்கப் பரிந்துரைத்த நண்பர்களுக்கு நன்றி. அனைத்துப் படங்களையும் கூடிய விரைவில் பார்க்கிறேன்’ என்றும் நிதேஷ் திவாரி தெரிவித்துள்ளார்.

ஃபஹத் ஃபாசில் நடிப்பில் கடைசியாக தமிழில் ‘சூப்பர் டீலக்ஸ்’ படமும், மலையாளத்தில் ‘அதிரன்’ படமும் வெளியாகின. தற்போது அன்வர் ரஷீத் இயக்கத்தில் ‘ட்ரான்ஸ்’ என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார்.

SCROLL FOR NEXT