15 நாட்கள் கால்ஷீட்டுக்காக பூஜா ஹெக்டேவுக்கு 2 கோடி ரூபாய் சம்பளம் என்று வெளியான செய்திக்கு, இயக்குநர் ஹரிஷ் சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஜிகர்தண்டா'. 2014-ம் ஆண்டு வெளியான இப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது 'ஜிகர்தண்டா' படத்தின் தெலுங்கு ரீமேக் 'வால்மீகி' என்ற பெயரில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், சித்தார்த் கதாபாத்திரத்தில் அதர்வா, பாபி சிம்ஹா கதாபாத்திரத்தில் வருண் தேஜ் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார் அதர்வா.
லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு, 15 நாட்கள் கால்ஷீட்டுக்காக 2 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்திருப்பதாகத் தகவல் வெளியானது. இவ்வளவு சம்பளமா? என்று இந்த விஷயம் பெரும் விவாதமாக உருவானது.
இது தொடர்பாக இயக்குநர் ஹரிஷ் சங்கர் தனது ட்விட்டர் பதிவில், “செய்தி வைரலாகப் பரவுவதால் இந்த இரண்டு விஷயங்கள் குறித்து தெளிவுதரும் பொறுப்பு எனக்கு இருப்பதாக நினைக்கிறேன்.
* பூஜா ஹெக்டே சம்பளம் பற்றிய தகவல் உண்மையானதல்ல.
*உங்கள் எல்லோருக்குமே தெரியும், எனக்கு பவர் ஸ்டாரை இயக்குவது பிடிக்கும் என. ஆனால், சமீபத்திய சந்திப்பு பற்றிய செய்தி உண்மையில்லை. என்னிடமிருந்தோ, தயாரிப்பு தரப்பிடமிருந்தோ அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்வரை சினிமா ரசிகர்கள் காத்திருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.