'ஆர்.எக்ஸ் 100' படத்தின் 2-ம் பாகமா 'ஆர்,டி.எக்ஸ் லவ்' என்ற கேள்விக்கு நடிகர் பாயல் ராஜ்பூத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
2018-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி வெளியாகி தெலுங்கில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘ஆர்.எக்ஸ்.100’. அஜய் பூபதி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் கார்த்திகேயா, பாயல் ராஜ்பூத் ஆகியோர் நடித்தனர்.
பெரும் வரவேற்பால் இதர மொழிகளில் இப்படத்தை ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தற்போதைக்கு இந்தி ரீமேக் மட்டும் முடிவாகியுள்ளது. இந்நிலையில், பாயல் ராஜ்பூத் நடிப்பில் தெலுங்கில் 'ஆர்.டி.எக்ஸ் லவ்' என்ற புதிய படம் உருவாகி வருகிறது.
இப்படம் 'ஆர்.எக்ஸ் 100' படத்தின் 2-ம் பாகம் என தகவல் பரவியது. படத்தலைப்பால் இது உண்மையாக இருக்குமோ என்று பலரும் பாயல் ராஜ்பூத்திடம் இக்கேள்வியைக் கேட்கத் தொடங்கினர்.
இந்த விவகாரம் தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ராஜ்பூத் பேசியிருப்பதாவது:
'' 'ஆர்.எக்ஸ் 100' படத்துக்கும் இதற்கும் எவ்வித தொடர்பில்லை. நிறைய பேர் என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்கின்றனர். இந்தப் படம் 'ஆர்.எக்ஸ்.100' படத்தின் 2-ம் பாகம் இல்லை. இது முற்றிலுமாக வேறு களம் கொண்டது. ஒரு கதாநாயகியை மையமாகக் கொண்ட படம் இது. இதில் ஒரு சமூக நோக்கம் உள்ளது. இது எனது 2-வது படம். எனக்கு கொஞ்சம் பதற்றமாகவே இருக்கிறது. இருந்தாலும் இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெறும் என நான் நம்புகிறேன். நீங்கள் அனைவரும் என் மீது காட்டும் அன்புக்கு நன்றி''.
இவ்வாறு பாயல் ராஜ்பூத் தெரிவித்துள்ளார்.