தென்னிந்திய சினிமா

கொலைக் குற்றவாளி வேடத்தில் துல்கர் சல்மான்: தொடங்கியது குருப்

ஸ்கிரீனன்

துல்கர் சல்மான் அடுத்ததாக ’குருப்’ என்ற படத்தில் நடிக்கிறார். சுகுமாரா குருப் என்ற நிஜ கொலைக் குற்றவாளியின் வாழ்க்கைக் கதையே இந்தப் படம்.

சுகுமாரா குருப் என்பவர், 1984 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலையின் குற்றவாளி. 8 லட்ச ரூபாய் காப்பீட்டுப் பணத்துக்காக, தனது உருவத்தை ஒத்த சாக்கோ என்பவரை விஷம் கொடுத்துக் கொன்று, காருடன் எரித்துவிட்டார். பின், தலைமறைவானார். இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும், குருப் இன்றுவரை பிடிபடவில்லை. கேரளாவில் அதிகம் தேடப்படும் குற்றவாளிகளில், சுகுமாரா குருப் முக்கியமானவர். இந்த உண்மைக் கதைதான் தற்போது திரைப்படமாகிறது.

குருப் கதாபாத்திரத்தில் துல்கர் நடிக்கிறார். இதுகுறித்து, படத்தின் இயக்குநர் ஸ்ரீநாத் ராஜேந்திரன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

"இந்த நாளைத் தந்த இறைவனுக்கு நன்றி. இந்த நாளில் 'குருப்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது என்ற நல்ல செய்தியை அறிவிக்கிறோம். இந்தப் படத்துக்கான வேலையை, 5 வருடங்களாக நிதானமாகச் செய்து வருகிறோம். இந்தப் பயணத்தில் எங்களுடன் கூடவே இருந்த துல்கர் சல்மானுக்கு, தனிப்பட்ட முறையில் நன்றி.

படக்குழுவைப் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். சனி யாஸ் என்ற எங்கள் திறமையான நண்பர், ரசிகர் உருவாக்கிய போஸ்டர் இதோ... இது எனக்கு மிகவும் பிடித்தது. இதை அதிகாரபூர்வமாக வெளியிட வேண்டும் என்று நினைத்தேன். இதோ..." என்று ஸ்ரீநாத் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT