'சாஹோ' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இசையமைப்பாளர் விலகுவதாக அறிவித்து சோதனையை உண்டாக்கியுள்ளார்.
'பாகுபலி' படத்துக்குப் பிறகு பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் படம் 'சாஹோ'. யுவி கிரியேஷன்ஸ் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படம் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியீடு சந்தேகமே என்று செய்திகள் வெளியாகி வந்த நிலையில், புதிய போஸ்டர் மூலம் ஆகஸ்ட் 15-ம் தேதி உறுதியாக வெளியீடு என்று அறிவித்தது படக்குழு. இத்தருணத்தில், இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வந்த ஷங்கர் - இஷான் - லாய் குழுவினர் படத்திலிருந்து விலகுவதாக தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.
இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் சமயத்தில், இசையமைப்பாளர்கள் விலகியிருப்பது படத்துக்குப் பின்னடைவாக இருக்கும் என கருதப்படுகிறது. பிரபாஸ், ஷ்ரத்தா கபூர் ஆகியோரது பிறந்த நாளுக்கு வெளியிடப்பட்ட வீடியோக்களுக்கு கூட தமன் தான் இசையமைப்பாளராகப் பணிபுரிந்தார். ஆகவே, அவரே இசையமைக்கக் கூடும் என தெரிகிறது.
படக்குழுவினர் வெளியிட்ட போஸ்டர்களில் கூட இசையமைப்பாளர் யார் என்பதை படக்குழு குறிப்பிடவில்லை. மேலும், இசையமைப்பாளர் விலகியதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. அதே தருணத்தில் புதிய இசையமைப்பாளர் யாரென்றும் படக்குழு அறிவிக்கவில்லை.
இறுதிக்கட்டத்தில் போய் மற்றொரு இசையமைப்பாளரிடம் இசையமைக்கக் கேட்டால், அவர் ஒப்புக் கொண்ட படங்களின் பணிகள் பாதிக்கும். இதனால் 'சாஹோ' படக்குழுவினருக்கு இதுவொரு சோதனையாகவே கருதப்படுகிறது.
'சாஹோ' படத்தில் ஷ்ரத்தா கபூர், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், மந்த்ரா பேடி, வெண்ணிலா கிஷோர், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் பிரபாஸுடன் நடித்துள்ளனர்.
'சாஹோ' பணிகளை முடித்துவிட்டு, கே.கே.ராதா கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். இதுவும் பெரும் பொருட்செலவில் தயாராகி வருகிறது.