தென்னிந்திய சினிமா

இன்று நானும் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்கிறேன்: மகேஷ் பாபு

செய்திப்பிரிவு

மகேஷ் பாபு நடிப்பில் கடந்த 9-ம் தேதி ரிலீஸான தெலுங்குப் படம் ‘மஹரிஷி’. வம்சி இயக்கிய இந்தப் படத்தில், பூஜா ஹெக்டே, ஜெகபதி பாபு, அல்லரி நரேஷ், பிரகாஷ் ராஜ் என நட்சத்திர நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே இந்தப் படம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், கடந்த 4 நாட்களிலேயே அந்தத் தொகையை வசூலித்துவிட்டது என்கிறார்கள்.

இந்நிலையில், நேற்று (மே 12) இதன் சக்சஸ் மீட் நடைபெற்றது. அதில் பேசிய மகேஷ் பாபு, “25 படங்களைக் கடந்த என் பயணம் விசேஷமானது. அதில், ‘மஹரிஷி’ இன்னும் விசேஷமானது. இன்று (நேற்று) இன்னும் விசேஷமான தினம். அன்னையர் தினம்.

என் அம்மா எனக்குக் கடவுள் மாதிரி. ஒவ்வொரு பட வெளியீட்டுக்கு முன்பும் அம்மாவைப் பார்க்கச் செல்வேன். அவர்கள் கையால் ஒரு காபி குடிப்பேன். அது கோயிலில் கடவுளின் பிரசாதத்தைச் சாப்பிடுவது போல நினைத்துக் கொள்வேன். அவர்கள் ஆசிர்வாதம் எனக்கு ரொம்ப முக்கியமானது. அந்த ஆசிர்வாதத்தால்தான் இந்த வெற்றி கிடைத்துள்ளது என நினைக்கிறேன். இந்த ப்ளாக்பஸ்டர் வெற்றியை அனைத்து அன்னையருக்கும் நான் சமர்ப்பிக்கிறேன்.

தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு நன்றி சொல்ல வேண்டும். அவரில்லாமல் சினிமாவில் பணிபுரிவது மிகவும் கடினம். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் படத்தின் பாடல்களுக்கு வேறு எவரும் இந்த அளவுக்கு இசையமைத்திருக்க முடியாது. கதையோடு பயணமாகும் பாடல்கள். அதைக் கேட்கும்போது எனக்கு இப்போதும்கூட புல்லரிக்கும். கண்ணீர் வரும். வரிகள் எழுதிய ஸ்ரீமணியும் அதற்கொரு முக்கியக் காரணம்.

அல்லரி நரேஷுக்கு இந்தப் படத்தில் மிக முக்கியக் கதாபாத்திரம். வம்சி கதையைச் சொன்னவுடன், ‘நரேஷ் இதில் நடிப்பாரா?’ என்று கேட்டேன். நரேஷ், கதையைக் கேட்டதுமே ஒப்புக்கொண்டார். அவர் ஒப்புக்கொண்டதும் நான் சந்தோஷப்பட்டேன். படத்தின் வெற்றிக்கு நீங்களும் ஒரு முக்கியக் காரணம்.

இந்தப் படம், எனது திரை வாழ்க்கையின் மிகப்பெரிய ஹிட் படங்களின் சாதனைகளை ஒரு வாரத்தில் கடந்துவிடும். இதைவிட பெரிய மகிழ்ச்சி எனக்கில்லை. தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கும், என் ரசிகர்களுக்கும், என் தந்தையின் ரசிகர்களுக்கும் தலை வணங்குகிறேன்.

பட வெளியீட்டுக்கு முன் வம்சி சொன்னார், ‘உங்கள் ரசிகர்களும், உங்கள் தந்தையின் ரசிகர்களும் படம் வெளியானதும் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்வார்கள்’ என்று. அவர்கள் மட்டுமல்ல, இன்று நானும் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்கிறேன் வம்சி” என்றார்.

SCROLL FOR NEXT