தென்னிந்திய சினிமா

மோடிக்கு எதிராக வாக்களிக்க இயக்குநர்கள் கூட்டறிக்கை: ஒழிவுதிவஸ்த்தே களி இயக்குநர் வரவேற்பு

ஸ்கிரீனன்

மோடிக்கு எதிராக வாக்களிக்க இயக்குநர்கள் விடுத்த கூட்டறிக்கையை 'ஒழிவுதிவஸ்த்தே களி' இயக்குநர் வரவேற்றுள்ளார்.

இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில், இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குநர்கள் பலர் ஒன்றிணைந்து, ‘மோடிக்கு வாக்களிக்க வேண்டாம்’ என வெளிப்படையாக கூட்டறிக்கை வெளியிட்டனர். இது, பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

தமிழ் இயக்குநர்களில், வெற்றிமாறன், பா.இரஞ்சித் ஆகியோர் மோடிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கையெழுத்திட்டவர்களில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை, மலையாளத் திரையுலகின் முன்னணி இயக்குநரான சனல்குமார் சசிதரன் வரவேற்றுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பாஜகவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டு அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். இதுபோல வரலாற்றில் நடந்ததே இல்லை. இது, கலைஞராக இருப்பதற்கு பெருமைப்படும் தருணம். நாங்கள் முயற்சித்தோம், குரலை எழுப்பினோம், ஜனநாயகத்தைக் காப்பாற்ற...

இவ்வாறு சனல்குமார் சசிதரன் தெரிவித்துள்ளார்.

'ஒழிவுதிவஸ்த்தே களி', ’செக்ஸி துர்கா’ உள்ளிட்ட பல மலையாளப் படங்களை இயக்கியவர் சனல்குமார் சசிதரன் என்பது நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT