தென்னிந்திய சினிமா

ராஜமவுலி படத்துக்காக தெலுங்கு கற்றுக் கொள்ளும் அலியா

செய்திப்பிரிவு

எஸ்.எஸ்.ராஜமவுலி ஆர் ஆர் ஆர் படத்துக்காக படத்தின் நாயகிகளில் ஒருவரான அலியா பட் பயிற்சியாளரை வைத்து தெலுங்கு கற்றுக்கொள்வதாக கூறியுள்ளார்.

ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் தேஜா இருவரும் நாயகர்களாக நடிக்க சுதந்திரப் போராட்ட காலத்தில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான கற்பனைக் கதையே ஆர்.ஆர்.ஆர். பாகுபலியைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமவுலி மீண்டும் பிரம்மாண்டமான ஒரு படைப்பைக் கையிலெடுத்துள்ளார். கோமரம் பீம், அல்லூரி சீதராம ராஜு என்ற ஆந்திராவைச் சேர்ந்த இரண்டு உண்மையான சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதையைச் சொல்லும் படம் இது.

இதில் சீதாராம ராஜுவின் ஜோடியாக பாலிவுட் நடிகை அலியா பட் நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகவே தெலுங்கு மொழியை கற்றுக் கொள்ள பயிற்சியாளரை நியமித்துள்ளார்.

மேலும் இது பற்றி பேசுகையில், "தெலுங்கு, கற்றுக் கொள்ள கடினமான மொழி. ஆனால் மிகவும் உணர்வுப்பூர்வமான மொழி. அந்த மொழியின் நுணுக்கங்களை நான் புரிந்து கொள்ள வேண்டும். சொற்கள் உச்சரிக்கப்படும் விதம், அதற்கு என்ன அர்த்தம் போன்றவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் எனது கதாபாத்திரத்தின் உணர்வுகளை என்னால் வெளிக்கொண்டு வர முடியும்" என்று கூறியுள்ளார்.

2020 ஜூலை மாதம் இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்டவர்களும் படத்தில் நடிக்கின்றனர். ஆர் ஆர் ஆர் என்ற தலைப்பு இறுதி செய்யப்படவில்லை என்றும், வேறு சிறந்த தலைப்புகள் கிடைத்தால் மாற்றுவோம் என்றும் ராஜமவுலி ஏற்கனவே பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT