'என்.டி.ஆர்' 2 பாகங்களுமே பெரும் தோல்வியைத் தழுவியதால், நடிகர் பாலகிருஷ்ணா படத்தயாரிப்பை நிறுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறைந்த ஆந்திர முதல்வரும், பழம்பெரும் நடிகருமான என்.டி.ராமாராவின் பயோபிக் (உண்மைக்கதை) சமீபத்தில் ஆந்திரா, தெலங்கானா மட்டுமின்றி, உலகமெங்கும் வெளியானது. என்.டி.ஆர் வேடத்தில் நடித்த அவரது மகனும் பிரபல நடிகருமான பாலகிருஷ்ணா நடித்துள்ளார். க்ரிஷ் இயக்கியுள்ள இப்படத்தில் வித்யா பாலன், ராணா, சுமந்த், கல்யாண் ராம், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
'என்.டி.ஆர் கதாநாயக்குடு' மற்றும் 'என்.டி.ஆர் மஹாநாயக்குடு' என்று இரண்டு பாகங்களாக வெளியானது. பெரும் பொருட்செலவில் வெளியான இப்படங்கள் படுதோல்வியைத் தழுவியது. இதில் 'என்.டி.ஆர் கதாநாயக்குடு' படத்தின் விழாவில், தனது அடுத்த படத்தை போயப்பாடி சீனு இயக்கவுள்ளதாகவும், தானே தயாரிக்கவுள்ளதாகவும் அறிவித்தார் பாலகிருஷ்ணா.
'என்.டி.ஆர்' படங்களின் தோல்வியால், தற்போது போயப்பாடி சீனு படத்தின் தயாரிப்பு பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். அப்படத்துக்கு வேறொருவர் தயாரிக்க முன்வந்துள்ளதாகவும், அதற்கான முறையான அறிவிப்பு ஜூனில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் போயப்பாடி சீனு இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் வெளியான 'வினய விதேய ராமா' படமும் படுதோல்வியை தழுவியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே பாலகிருஷ்ணா - போயப்பாடி சீனு இருவருமே வெற்றியைக் கொடுத்தாக வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், மக்களவைத் தேர்தலில் பாலகிருஷ்ணா பிரச்சாரம் செய்யவுள்ளதால் தன் அடுத்த பட அறிவிப்பை தேர்தலுக்கு பிறகு ஒத்திவைத்துள்ளார்.