நாகர்ஜுனாவின் அடுத்த படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் ரகுல் ப்ரீத்சிங்.
‘மாஸ்கோவின் காவேரி’, ‘வணக்கம் சென்னை’, ‘யூ டர்ன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ராகுல் ரவீந்திரன். இவர் பாடகி சின்மயியின் கணவர். ஏற்கெனவே தெலுங்கில் ‘சி லா சௌ’ என்ற வெற்றிப்படத்தை ராகுல் இயக்கியுள்ளார். தற்போது, 2002-ம் ஆண்டு நாகர்ஜுனா - சோனாலி பிந்த்ரே நடிப்பில் வெளியான ‘மன்மதுடு’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார்.
நாகர்ஜுனா மீண்டும் நாயகனாக நடிக்க, ரகுல் ப்ரீத்சிங் நாயகியாக நடிக்கிறார். இன்று (மார்ச் 25) பூஜையுடன் பட வேலைகள் துவங்கியுள்ளன. நாகர்ஜுனா மற்றும் பி.கிரண் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.
‘ஆர்.எக்ஸ் 100’ பட இசையமைப்பாளர் சைத்தன் பரத்வாஜ் இசையமைக்க, சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். லக்ஷ்மி, வெண்ணெலா கிஷோர், நாசர், தேவதர்ஷினி உள்ளிட்டவர்களும் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு, ஐரோப்பாவில் நடக்கிறது.