'ஒரு அடார் லவ்' வெளியீட்டுக்கு முன், பின் ப்ரியா வாரியர் அளித்த பேட்டி குறித்து கண் கலங்கியபடியே பதிலளித்துள்ளார் இயக்குநர் ஓமர் லுலு
ஓமர் லுலு இயக்கத்தில் ரோஷன் அப்துல் ரஹூஃப், ப்ரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஓரு அடார் லவ்'. 'மாணிக்க மலராய பூவி' பாடல், ப்ரியா பிரகாஷ் வாரியரின் டீஸர் வைரல் என மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது.
இந்தியத் திரையுலகில் மிக முக்கியமான நடிகர்கள் அனைவருமே ப்ரியா பிரகாஷ் வாரியரின் கண் சிமிட்டலுக்கு ரசிகர்களானார்கள். இதனால் மலையாளம், தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் காதலர் தினத்தன்று வெளியானது. இப்படம் மிக மோசமான விமர்சனங்களைப் பெற்று, படுதோல்வியை சந்தித்தது.
இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகிறார்கள். முதலில் தனக்குத் தான் முக்கியத்துவம் இருந்தது என்றும், ப்ரியா வாரியரின் வீடியோ பிரபலமானதால் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து கதையை மாற்றிவிட்டார்கள் என்று நூரின் ஷெரீஃப் தெரிவித்திருந்தார்.
தற்போது இயக்குநர் ஓமர் லுலு அளித்துள்ள தொலைக்காட்சி பேட்டியொன்றில் "அந்தப் பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனவுடன் படத்தை இன்னும் நல்ல தரத்தில் எடுக்கலாம் என தயாரிப்பாளரிடம் சொன்னேன். அப்போதும், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில், ப்ரியா பிரகாஷை பிரதானமாக வைத்து படத்தை எடுக்கச் சொன்னார். அதற்கு முன் படத்தின் கதை வேறுவிதமாக இருந்தது. இளம் ஜோடியின் மரணத்தைச் சுற்றி நடக்கும் கதை. ஆனால் அது நடக்கவில்லை. தயாரிப்பாளர்கள், பிரியாவை முதன்மைபடுத்தி வேறொரு வகையில் படத்தை எடுக்கச் சொன்னார்கள்.
ஆரம்பத்தில் ப்ரியாவை வைத்து படமெடுக்க சம்மதித்தேன். ஆனால் நான் கதையை மாற்றியதால் தயாரிப்பாளருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் படத்தின் டப்பிங் உரிமைக்கான பணத்தை எனக்குக் கொடுக்கவில்லை. உண்மையில் இதே படத்தில் கதா ஜான் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நூரின் ஷெரீஃப் ப்ரியா பிரகாஷ் வாரியரை விட திறமையான நடிகை. இப்போது ப்ரியா பிரகாஷுடன் எந்த விதத்திலும் நான் தொடர்பில் இல்லை" என்று கூறியுள்ளார்.
இதில் பேசிக் கொண்டிருக்கும் போதே, படம் வெளியாவதற்கு முன்பு ப்ரியா வாரியரும் இயக்குநர் ஓமர் லுலுவும் அளித்த பேட்டியை திரையிட்டார்கள். அதில் "விஜய் சேதுபதி படம், சல்மான்கான் படம் என எத்தனை வாய்ப்புகள் வந்தாலும், அந்த தருணத்தில் இயக்குநர் ஓமர் லுலு சாருடைய படத்துக்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பேன்" என்று ப்ரியா வாரியர் கூறினார்.
இந்த வீடியோ ஓடிக் கொண்டிருக்கும் போதே, கண்கலங்கத் தொடங்கினார் இயக்குநர் ஓமர் லுலு. இதனால் பலரும் அதிர்ச்சியடைந்தார்கள். பின்பு, "சல்மான்கான் படத்தில் நடிக்கும் அளவுக்கு ப்ரியா வாரியர் பிரபலமாகிவிட்டார்கள். ஆகையால் என்னைப் போன்ற சிறிய இயக்குநர்கள் இனி அவருக்கு தேவையில்லை" என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.