'என்.டி.ஆர்' 2 பாகங்களுமே தோல்வியைத் தழுவியிருப்பதைத் தொடர்ந்து, இயக்குநர் க்ரிஷை கிண்டல் செய்துள்ளார் கங்கணாவின் சகோதரி.
கங்கணா ரணாவத் நடிப்பில் வெளியான படம் 'மணிகர்ணிகா'. ஜீ ஸ்டூடியோ தயாரித்துள்ள இப்படத்தை க்ரிஷ் மற்றும் கங்கணா ரணாவத் இணைந்து இயக்கினர். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படத்தின் வசூல் ரூ.100 கோடியைக் கடந்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே, 'என்.டி.ஆர்' வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கும் வாய்ப்பு க்ரிஷுக்குக் கிடைத்தது. மேலும், 'மணிகர்ணிகா' படக்குழுவினருடனும் க்ரிஷ்ஷுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், 'என்.டி.ஆர்' வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கத் தொடங்கினார்.
பாலகிருஷ்ணா தயாரித்து என்.டி.ஆராக பாலகிருஷ்ணா நடித்தார். வித்யாபாலன், ராணா, பிரகாஷ்ராஜ் என பெரும்பாலான நட்சத்திரங்கள் நடித்து, பெரும் பொருட்செலவில் தயாராகி 2 பாகங்களாக வெளியானது.
முதல் பாகமான 'என்.டி.ஆர் கதாநாயக்குடு' பெரும் தோல்வியைத் தழுவியது. அதனைத் தொடர்ந்து அப்படத்தின் 2-வது பாகம் நேற்று (பிப்.22) வெளியானது. இப்படமும் முதல் பாகத்தின் அளவுக்குக் கூட வசூல் இல்லை என்று தெலுங்கு திரையுலக வியாபார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான செய்தியை மேற்கோளிட்டு கங்கணாவின் சகோதரி ரங்கோலி சந்தெல் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ''இதுகுறித்து சந்தோஷப்பட எதுவுமில்லை. ஆனால் (கங்கணா கெடுத்துவைத்த) மணிகர்ணிகா என்கிற 24 கேரட் தங்கத்தை உருவாக்கிய உன்னதக் கலைஞர் இயக்குநர் க்ரிஷுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். இந்த உலகத்தைத் தாண்டி இன்னொரு உலகம் இருக்கிறது. நாம் எல்லோரும் அதை நினைவில் கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.