தென்னிந்திய சினிமா

தென்னிந்திய மொழிகளில் ரீமேக்காகும் Gully Boy

ஸ்கிரீனன்

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 'Gully Boy' ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

ஜோயா அக்தர் இயக்கத்தில் ரன்வீர் சிங், அலியா பட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்திப் படம் 'Gully Boy'. பிப்.14-ம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மும்பையில் சேரி பகுதிகளில் வாழும் ஒருவர் எப்படி ராப் நட்சத்திரமாக உருவாகிறார் என்பதே 'Gully Boy' படத்தின் கதையாகும். இப்படத்தை பல்வேறு முன்னணி இந்தி நட்சத்திரங்கள் தங்களுடைய சமூகவலைத்தள பக்கத்தில் பாராட்டி புகழ்ந்துள்ளனர்.

தற்போது இப்படத்தை தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. தெலுங்கில் முன்னணி நாயகன் ஒருவர் இப்படத்தின் ரீமேக் உரிமைக்கு பேசியுள்ளார்.

'Gully Boy' படக்குழுவினர் உரிமைக்கு என்ன விலைச் சொல்லவுள்ளார்கள் என்பதைப் பொறுத்தே இந்த ரீமேக் பேச்சுவார்த்தை தொடரும் என தெரிகிறது. அதனைத் தொடர்ந்து தமிழிலும் ரீமேக் செய்ய பலரும் முன்வந்துள்ளனர்.

இந்த தகவல் சமூகவலைத்தளத்தில் வெளியானவுடன், 'Gully Boy' படம் பார்த்த பலருமே 'இதனை ரீமேக் செய்யாமல் இருப்பதே சிறந்தது' என்று தகவல் தெரிவித்து வருகிறார்கள். சென்னையில் இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பால், இன்று (பிப்.21) முதல் சத்யம் திரையரங்கில் சப்-டைட்டிலுடன் திரையிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT