நூரின் ஷெரீஃப் பேட்டியால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது 'ஒரு அடார் லவ்' திரைப்படம்
ஓமர் லுலு இயக்கத்தில் ரோஷன் அப்துல் ரஹூஃப், ப்ரியா பிரகாஷ் வாரியர், நூரின் ஷெரீஃப் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஓரு அடார் லவ்'. 'மாணிக்க மலராய பூவி' பாடல், ப்ரியா பிரகாஷ் வாரியரின் டீஸர் வைரல் என மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது.
இந்தியத் திரையுலகில் மிக முக்கியமான நடிகர்கள் அனைவருமே ப்ரியா பிரகாஷ் வாரியரின் கண் சிமிட்டலுக்கு ரசிகர்களானார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே மலையாளம், தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் வெளியான இப்படம் படுதோல்வியைத் தழுவியது.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மீண்டும் படப்பிடிப்பு நடத்தி இணைத்தார்கள். அப்படியும் ரசிகர்களிடையே படம் எடுபடவில்லை. இந்நிலையில் இப்படத்தில் நடித்த நூரின் ஷெரீஃப் படக்குழுவினர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
நூரின் ஷெரீஃப் அளித்துள்ள பேட்டியில், “இயக்குநர் ஓமர் லுலு என்னைக் கதாநாயகியாக தேர்ந்தெடுத்ததும் மிக மகிழ்ச்சியடைந்தேன். ஆனால், ப்ரியா வாரியரின் கண் சிமிட்டல் வைரல் ஆனதால், மொத்தக் கதையையும் மாற்றி என் கதாபாத்திரத்தை ஓரம் கட்டினார்கள்.
திரையில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் முதல் வாய்ப்பு இதுதான். என் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் குறைந்ததால் மிகுந்த ஏமாற்றமடைந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நூரின் ஷெரீஃப்பின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.