தென்னிந்திய சினிமா

96 தெலுங்கு ரீமேக்கில் என்னென்ன மாற்றங்கள்? - இயக்குநர் பிரேம்குமார் விளக்கம்

செய்திப்பிரிவு

'96' தெலுங்கு ரீமேக்கில் மாற்றம் என்று வெளியான செய்திக்கு, அப்படத்தின் இயக்குநர் பிரேம்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

2018-ம் ஆண்டில் இளைஞர்கள் கொண்டாடிய படம் '96'. பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்தனர். கோவிந்த் வசந்தா இசையமைப்பாளராகப் பணிபுரிந்தார்.

தீபாவளிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்டாலும், திரையரங்குகளில் அதையும் தாண்டி 100 நாட்கள் ஓடி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் தெலுங்கு ரீமேக்கை கடும் போட்டிக்கு இடையே முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு கைப்பற்றினார்.

தெலுங்கிலும் பிரேம்குமாரே இயக்கவுள்ளார். விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் சர்வானந்த், த்ரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்க ஆயுத்தமாகி வருகிறது படக்குழு.

தெலுங்கு ரீமேக்கில் பள்ளிக் காலத்துக் காதலை படமாக்காமல், அதைக் கல்லூரி காதலாக மாற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் இயக்குநர் பிரேம்குமார். 

இது தொடர்பாக இயக்குநர் பிரேம்குமார் "96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில், பள்ளிக் கால காட்சிகளை மாற்றி கல்லூரிக் காட்சிகளாக வைக்கப்போவதாக வதந்திகள் வருகின்றன. அவை முற்றிலும் பொய். 96 படத்தின் அழகே பள்ளிக் காலத்திலிருந்தே தொடங்கும் அன்பின் பயணம் தான். வெகு சில விஷயங்களை தெலுங்குக்கு ஏற்றவாறு மாற்றி எடுக்கிறோம். மற்றபடி அப்படியேதான் மீண்டும் படம்பிடிக்க உள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

தமிழுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்த கோவிந்த் வசந்தாவே தெலுங்கு ரீமேக்கிற்கும் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்

SCROLL FOR NEXT