படப்பிடிப்பின்போது சிறிய விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா, 'காயங்களைக் கொண்டாடுங்கள்' என்று ரசிகர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
துணை நடிகராக நடிக்கத் தொடங்கி, ‘பெல்லி சூப்புலு’ படத்தின் மூலம் ஹீரோ ஆனவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. பல மொழிகளிலும் இந்தப் படத்தை ரீமேக் செய்து வருகின்றனர்.
அடுத்தடுத்து விஜய் தேவரகொண்டா நடிப்பில் ‘டாக்ஸிவாலா’, ‘கீதா கோவிந்தம்’, 'நோட்டா’ ஆகிய படங்கள் வெளியாகின. தற்போது அவர் நடிக்கும் ‘டியர் காம்ரேட்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
பரத் கம்மா இயக்கும் இந்தப் படத்தில், கல்லூரி மாணவனாக நடிக்கிறார் விஜய் தேவரகொண்டா. அவருக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ படத்தில் நடித்த ராஷ்மிகா நடிக்கிறார்.
இந்நிலையில் ‘டியர் காம்ரேட்’ படத்தின் படப்பிடிப்பு காக்கிநாடாவில் நடைபெற்று வந்தது. ரயில் நிலையத்தில் இருந்து ஓடிவந்து ரயிலில் ஏறும் காட்சியில் விஜய் தேவரகொண்டா நடித்துக் கொண்டிருந்தார்.
திடீரென கால் சறுக்கியதில் ரயிலில் ஏற முடியாமல் சிரமப்பட்டார் தேவரகொண்டா. அப்போது அவரின் கையில் சிராய்ப்புகளும் சிறிய காயங்களும் ஏற்பட்டன. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அவர், ''உங்களின் காயங்களைக் கொண்டாடுங்கள். ஏனெனில் வாழ்க்கையில் எதுவும் எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை'' என்று தெரிவித்துள்ளார்.