2018-ஆம் வருடம் தெலுங்கு திரைப்பட உலகில் முத்திரை பதித்த படங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன.
டிசம்பர் மாதம் வரை 164 திரைப்படங்கள் நேரடி தெலுங்கு மொழிப் படங்களாக வெளியாகியுள்ளன. இதில் 14 படங்கள் மட்டுமே வெற்றிகரமானவை. கடந்த வருடத்தை விட வெற்றி சதவீதம் குறைந்தே உள்ளது. கடந்த வாரம் வெளியான படங்கள் வெற்றி பெற்றாலும் கூட இந்த வெற்றி சதவீதத்தில் பெரிய மாற்றம் இருக்காது. கிட்டத்தட்ட 10 திரைப்படங்கள் தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன.
'ரங்கஸ்தலம்' இந்த வருடம் வெளியான தெலுங்குப் படங்களில் அதிகபட்ச வசூல் பெற்ற படமாக மாறியது. விநியோகஸ்தர் பங்காக மட்டுமே கிட்டத்தட்ட ரூ.100 கோடியை இப்படம் வசூலித்தது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 'கீத கோவிந்தம்' படமும் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் செய்தது. முதலீட்டுக்கு அதிகமான வருமானம் என்கிற அடிப்படையில் 'கீத கோவிந்தம்' படமே இந்த வருடம் அதிக லாபம் சம்பாதித்துள்ள திரைப்படம். தொடர்ந்து 'மஹாநடி', 'ஆர்.எக்ஸ். 100', 'சலோ', 'கூடாச்சாரி' உள்ளிட்ட நேரடித் தெலுங்கு படங்கள் நல்ல வசூல் செய்துள்ளன.
ஜூனியர் என்.டி.ஆரின் 'அரவிந்த சமேதா', மகேஷ் பாபுவின் 'பரத் அனே நேனு' ஆகிய படங்களும் நன்றாக வசூல் செய்திருந்தாலும் அவை அதிக விலைக்கு விற்கப்பட்டதால், சில இடங்களில் சிறைய நஷ்டத்தைச் சந்தித்துள்ளன.
டப்பிங் படங்களின் வெற்றி
மற்ற மொழிப் படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு அங்கு வெற்றி பெறுவது ஒன்றும் புதிதல்ல. அப்படி 2018-ல், விஷாலின் 'அபிமன்யுடு' (இரும்புத்திரை), '2.0', 'சர்கார்', 'பத்மாவத்', 'அவெஞ்சர்ஸ்', 'தி நன்', 'மிஷன் இம்பாசிபிள் ஃபால் அவுட்' ஆகிய படங்கள் தெலுங்கில் நல்ல வசூல் செய்துள்ளன.
தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்ட படங்களிலேயே அதிக வசூல் பெற்ற படம் என்ற சாதனையை '2.0' படைத்தாலும் முதலீட்டில் 70 சதவீதம் மட்டுமே வசூலித்து சில விநியோகஸ்தர்களுக்கு நஷ்டமாக அமைந்தது. 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக விநியோகஸ்தர் பங்கை வசூலித்த முதல் டப்பிங் படமும் '2.0' தான்.
தோல்வி முகம் கண்ட அல்லு அர்ஜுன், பவன் கல்யாண்
அதிக எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான பவன் கல்யாணின் 'அஞ்ஞாதவாசி' மற்றும அல்லு அர்ஜுனின் 'நா பேர் சூர்யா' ஆகிய படங்கள் மோசமான தோல்வியைச் சந்தித்தன. நாக சைதன்யாவுக்கு 'ஷைலஜா ரெட்டி அல்லுடு' சுமாரான படமாகவும், 'சவ்யாசாசி' பெரும் தோல்வியாகவும் அமைந்தன.
இந்த வருடத்தில் 'மஹாநடி'யோடு சேர்த்து மூன்று ஹிட் படங்களில் நடித்திருந்த விஜய் தேவரகொண்டா 'யே மந்த்ரம் வேசாவே' (அடுத்து வெளியான 'கீத கோவிந்தம்' ஹிட்), 'நோட்டா' (அடுத்து வெளியான 'டாக்ஸிவாலா' ஹிட்) ஆகிய இரண்டு தோல்விப் படங்களிலும் நடித்திருந்தார்.
துரதிர்ஷ்டவசமாக, ரவி தேஜா இந்த வருடம் நடித்த மூன்று படங்களும் அடுத்தடுத்து தோல்விப் படங்களாக அமைந்தன. நாகார்ஜுனா, நானி, சாய் தரம் தேஜ் ஆகிய ஹீரோக்களுக்கும் இந்த வருடம் சொல்லிக்கொள்ளும்படியாக அமையவில்லை.