தென்னிந்திய சினிமா

மகனை தயாரிப்பாளராக அறிமுகப்படுத்தும் எஸ்.எஸ்.ராஜமெளலி

செய்திப்பிரிவு

‘பாகுபலி’ படத்தின் மூலம் உலகப் புகழ்பெற்றவர் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி. இவர் தற்போது ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம் சரணை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் பூஜை, சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. கடந்த 19-ம் தேதி முதல் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தன்னுடைய மகன் எஸ்.எஸ்.கார்த்திகேயா ஒரு படத்தைத் தயாரிக்கப் போவதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார் எஸ்.எஸ்.ராஜமெளலி. எஸ்.எஸ்.கார்த்திகேயா, ‘பாகுபலி’ படத்தில் இரண்டாவது யூனிட் இயக்குநராகப் பணியாற்றியவர். தொடர்ந்து இயக்குநராக அறிமுகமாவார் என்று பார்த்தால், ஒரு கபடி டீமை விலைக்கு வாங்கி தெலங்கானா ப்ரீமியர் லீக்கில் கலந்து கொண்டார்.

மேலும், சமீபத்தில்தான் எஸ்.எஸ்.கார்த்திகேயாவுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் 5-ம் தேதி நடைபெற உள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ராமநாயுடு ஸ்டுடியோவில், மாலை 6.30 மணிக்குத் திருமணம் நடைபெற உள்ளது.

எஸ்.எஸ்.கார்த்திகேயா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘ஆகாஷ்வாணி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.ராஜமெளலியின் ஆஸ்தான இசையமைப்பாளரான எம்.எம்.கீரவாணியின் மகன் கால பைரவா, இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

ராஜமெளலியிடம் ஏற்கெனவே உதவி இயக்குநராகப் பணியாற்றிய அஸ்வின் கங்கராஜு இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

SCROLL FOR NEXT