விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘96’ படம், தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது.
விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘96’. ஒளிப்பதிவாளரான சி.பிரேம் குமார், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கோவிந்த் வசந்தா இசையமைத்த இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களும் சூப்பர் ஹிட்டாகியுள்ளன.
படத்தைப் பார்த்த பெரும்பாலானவர்கள் இதைக் கொண்டாடி வருகின்றனர். பலரின் பள்ளிக்கால காதல் நினைவுகளைக் கிளறிவிட்டுள்ளது இந்தப் படம். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் நந்தகோபால் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்த நிலையில், ‘96’ படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான தில் ராஜு, தெலுங்கு ரீமேக் உரிமையைக் கைப்பற்றி இருக்கிறார். தெலுங்கிலும் பிரேம் குமாரே இயக்க உள்ளார். அல்லு அர்ஜுன் அல்லது நானி ஆகிய இரண்டு பேரில் யாராவது ஒருவர் விஜய் சேதுபதி வேடத்தில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரேம் குமாரிடம் பேசியபோது, “தெலுங்கு ரீமேக்கைப் பற்றி ஏராளமான வதந்திகள் உலா வருகின்றன. அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கிறார் என்று ஒருபக்கமும், நானி தான் ஹீரோ என இன்னொரு பக்கமும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
யார் ஹீரோ என்பதை தயாரிப்பு நிறுவனம் விரைவில் அறிவிக்க இருக்கிறது. அதுவரை தயவுசெய்து எந்த வதந்தியையும் பரப்ப வேண்டாம்” என்றார்.
எனவே, விஜய் சேதுபதி வேடத்தில் நடிக்கப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.