தென்னிந்திய சினிமா

வதந்திகளைப் பரப்பாதீர்கள்; பாதுகாப்பு கருதி விஜய் கட் அவுட்டை நாங்கள்தான் எடுத்தோம்: கொல்லம் நண்பன்ஸ்

செய்திப்பிரிவு

காற்று அதிகமாக வீசியதன் காரணமாக மக்களின் பாதுகாப்பு கருதியே விஜய்யின் 175 அடி உயர கட் அவுட் எடுக்கப்பட்டது என்று விஜய் ரசிகர் மன்ற அமைப்பான கொல்லம் நண்பன்ஸ் தெரிவித்தனர்.

கேரளாவில் விஜய் ரசிகர் மன்றங்களில் பிரபலமானது கொல்லம் நண்பன்ஸ்  (kollam nanbans) ரசிகர் மன்ற அமைப்பு.

தீபாவளி அன்று  ( நவம்பர் 6 ஆம் தேதி) திரைக்கு வரவுள்ள 'சர்கார்' படத்துக்கு இந்திய நடிகர்களிலேயே மிகப் பெரிய கட் அவுட்டை  விஜய்க்காக வெள்ளிக்கிழமை மாலை கொல்ல பகுதியில் திறந்தனர். இந்த கட் அவுட் உயரம் சுமார் 175 அடி ஆகும்.

இந்த நிலையில் கட் அவுட் நிறுவப்பட்ட இடத்தில் காற்று அதிகமாக வீசியதாலும் , பொது மக்கள்  தொடர்ந்து அப்பகுதிக்கு வருகை தந்ததாலும் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் கொல்லம் மாவட்ட ஆட்சியரின் அறிவுத்தலின் படியும் விஜயின் கட் அவுட் ஞாயிற்றுக்கிழமை அப்புறப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து கொல்லம் நண்பன்ஸ் அமைப்பினர் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளனர்.

அதில், ”முறையாக அனுமதி பெற்று நாங்கள் வைத்த 175 கட் அவுட் மூலம் இந்தியா முழுவதும் அறியப்படுகிற ஒரு ரசிகர் மன்றமாக கொல்லம் நண்பன்ஸ் மாறியிருக்கிறது.   இந்த கட் அவுட் வைத்த பின்னர் இந்த இடம் ஒரு சுற்றுலாத் தளமாக மாறிவிட்டது.

எங்களுடைய கட் அவுட்டைக் காண வேண்டும் என்று குடும்பம் குடும்பாக இங்கு மக்கள் வந்தனர். அவர்களுடைய சந்தோஷங்களை நாங்கள் கண்டோம்.

குழந்தைகளும் அதிக அளவு வருகை தந்தனர். இங்கு ஒரு கிலோ மீட்டர் அருகில் கொல்லம் கடற்கரை உள்ளதால் இப்பகுதியில் பலத்த காற்று வீசுகிறது. எனவே மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கொல்ல மாவட்ட ஆட்சியரின் ஆலோசனைப்படி இந்த கட் அவுட்டை எடுக்கிறோம்.  இந்த கட் அவுட்டை நாங்கள் தான் எடுத்தோம். வதந்திகளைப் பரப்ப வேண்டாம்” என்று கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT