நாடோடிகள், சீடன், எங்கேயும் எப்போதும், புலிவால், அதிதி உள்ளிட்ட படங்களில் நடிகை அனன்யா நடித்துள்ளார். இவர் கேரளாவின் கொச்சி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் அனன்யாவின் வீடு வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கடந்த 2 நாட்களாக அவரும் அவரது குடும்பத்தினரும் வெள்ளத்தில் தத்தளித்தனர். இடைவிடாமல் மழை பெய்து வருவதால் வெள்ளம் வடியவில்லை.
எனவே கொச்சி வீட்டில் இருந்து வெளியேறி பெரும்பாவூர் பகுதியில் உள்ள தோழி ஆஷா சரத்தின் வீட்டுக்கு அனன்யாவும் அவரது குடும்பத்தினரும் சென்றுள்ளனர். இதுதொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அனன்யா கூறியிருப்பதாவது:
எனது வீடு வெள்ளத்தில் முழுமையாக மூழ்கிவிட்டது. ஒவ்வொரு நிமிடமும் வீட்டில் வெள்ளம் அதிகரித்து கொண்டே சென்றது. கடந்த வெள்ளிக்கிழமை காலை வீட்டில் இருந்து பாதுகாப்பாக வெளியேறிவிட்டோம். தற்போது பெரும்பாவூரில் உள்ள ஆஷா சரத்தின் வீட்டில் தங்கியுள்ளோம்.
இன்னமும் மழை பெய்து கொண்டே இருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. எல்லாம் கடவுளின் கையில் உள்ளது. ஏராளமானோர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவி தேவை. எங்கள் பகுதி மக்களை மீட்ட அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.