இந்தி நடிகை ரவீணா டாண்டன் தமிழில், அர்ஜுனுடன் ‘சாது’, கமலுடன் ‘ஆளவந்தான்’ படங்களில் நடித்துள்ளார். ‘கே.ஜி.எஃப் 2’ படத்திலும் நடித்துள்ள இவருக்கு ராஷா தடானி என்ற மகள், ரன்பீர் வர்தன் என்ற மகன் உள்ளனர்.
மேலும், பூஜா, சாயா ஆகிய பெண் குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில், ரவீணாவின் மகள் ராஷா, ‘ஆசாத்’ என்ற இந்திப் படத்தில் நாயகியாக அறிமுகமானார். அபிஷேக் கபூர் இயக்கிய இப்படத்தில் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் வெற்றி பெறவில்லை என்றாலும் அதில் இடம் பெற்ற ‘உயி அம்மா’ என்ற பாடல் ஹிட்டானது.
அதில் ராஷாவின் நடனம் பாராட்டப்பட்டது. இந்நிலையில் ராஷா தடானி தெலுங்கில் அறிமுகமாவதாகத் தகவல் வெளியாயின. படக்குழு அதை உறுதிப்படுத்தியுள்ளது. தெலுங்கு ஹீரோ மகேஷ்பாபுவின் சகோதரரான ரமேஷ் பாபுவின் மகன் ஜெய கிருஷ்ணா ஹீரோவாக அறிமுகமாகிறார். அஜய் பூபதி இயக்கும் காதல் கதையில் ராஷா தடானி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை வைஜயந்தி மூவிஸ் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க இருக்கிறது.