மோகன்லால், மீனா உள்பட பலர் நடித்து கடந்த 2013-ம் ஆண்டு வெளியான மலையாளப் படம் ‘த்ரிஷ்யம்’. ஜீத்து ஜோசப் இயக்கிய இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
தமிழில் இப்படம் கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் உருவாகி வெற்றி பெற்றது. இதன் இரண்டாம் பாகமான ‘த்ரிஷ்யம் 2’ நேரடியாக ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் ‘த்ரிஷ்யம் 3’ பாகம் உருவாகி வருகிறது. மலையாளத்தில் உருவாகும் இப்படம் பான் இந்தியா முறையில் மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ‘த்ரிஷ்யம் 3 ’ திரைப்படத்தை முன்பு போலவே முதலில், மலையாளத்தில் வெளியிடுவோம் என்று இயக்குநர் ஜீது ஜோசப் தெரிவித்துள்ளார்.
“மலையாளப் பார்வையாளர்கள் தொடக்கத்தில் இருந்தே இப்படத்தின் கதாபாத்திரமான ஜார்ஜ்குட்டியுடன் வாழ்ந்திருக்கிறார்கள். அவரது கதை எப்படி முடிகிறது என்பதை வேறு எவருக்கும் முன்பாகப் பார்க்க அவர்கள் தகுதியானவர்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.