தென்னிந்திய சினிமா

அல்லு அர்ஜுன் படத்தில் ஜப்பானிய நடனக் கலைஞர்

செய்திப்பிரிவு

‘புஷ்பா 2’ படத்தை அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை அட்லி இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சயின்ஸ் பிக்‌ஷன் படமான இதில் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். ஜான்வி கபூர், மிருணாள் தாக்குர், ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் நாயகிகளாக நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

“சர்வதேச தரத்துடன் இந்தியாவில் தயாராகும் ‘பான் வேர்ல்ட்’ படமாக இது இருக்கும். இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவில், இந்தப் படம் தயாராகிறது” என படக் குழுவினர் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர். அதன்படி இந்தப் படத்துக்குப் பிரபல ஜப்பானிய-பிரிட்டீஷ் நடனக் கலைஞரும் நடன இயக்குநருமான ஹோகுடோ கோனிஷி பணியாற்றியுள்ளார்.

அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர், “இந்தியத் திரைப்படத் துறை பற்றி ஆர்வம் கொண்டிருந்தேன். அதில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்தப் படம் பற்றி தற்போது அதிகம் பேச முடியாது. மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்படும் இந்தப் படத்துக்காகக் கடின உழைப்பையும் அதிக நேரத்தையும் செலவிட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் முடிவடைந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் நடை பெறும் என்றும் இதற்காக அபுதாபியில் லொகேஷன் பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT