தென்னிந்திய சினிமா

நடிகர் நிவின் பாலி மீதான வழக்கு விசாரணைக்குத் தடை

செய்திப்பிரிவு

பிரபல மலையாள நடிகரான நிவின் பாலி, தமிழில் நேரம், ரிச்சி உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் ‘மகாவீர்யர்' என்ற பான் இந்தியா படத்தைத் தயாரித்து, நடித்தார். கடந்த 2022-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளர் ஷம்நாஸ், நிவின் பாலி, படத்தின் இயக்குநர் எப்ரிட் ஷைன் ஆகியோருக்கு எதிராக வைக்கம் நீதிமன்றத்தில் பணமோசடி வழக்கு தொடர்ந்தார்.

அதில், ‘ஆக்ஷன் ஹீரோ பைஜூ 2' என்ற படத்தின் வெளிநாட்டு உரிமைக்காக, ரூ.1.90 கோடி கொடுத்ததாகவும், தனக்குத் தெரியாமல் படத்தின் உரிமையை நிவின் பாலியும், எப்ரிட் ஷைனும் வேறு ஒருவருக்கு ரூ.5 கோடிக்கு விற்று விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நிவின் பாலி, எப்ரிட் ஷைன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து நிவின் பாலி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி வி.ஜி.அருண், இந்த பண மோசடி வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உத்தரவில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT