தென்னிந்திய சினிமா

எனது முதல் தவறான முடிவு ‘கேம் சேஞ்சர்’ - தயாரிப்பாளர் வெளிப்படை

ஸ்டார்க்கர்

எனது முதல் தவறான முடிவு ‘கேம் சேஞ்சர்’ படம் தான் என்று தயாரிப்பாளர் தில் ராஜு வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

நிதின் நடித்துள்ள ‘தம்முடு’ படத்தினை தயாரித்துள்ளார் தில் ராஜு. ஜூலை 4-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக அளித்த பேட்டியில் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் செய்த தவறு குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார் தில் ராஜு.

‘கேம் சேஞ்சர்’ தோல்வி குறித்து தில் ராஜு, “எனது திரையுலக வாழ்வில், ஷங்கர் போன்ற பெரிய இயக்குநர்களுடன் ஒருபோதும் பணியாற்றியதில்லை. ‘கேம் சேஞ்சர்’ படம் தான் எனது முதல் தவறான முடிவு. அப்படத்தின் ஒப்பந்தத்தில் எனது கருத்துகளை தெளிவாக குறிப்பிட்டு தயாரிப்பில் இறங்கியிருக்க வேண்டும். ஆனால், நான் அப்படிச் செய்யவில்லை. அது எனது தவறு.

அப்படத்தின் எடிட்டர் கூறியிருப்பது போன்று, படத்தின் காட்சிகள் ஏழரை மணி நேரம் இருந்தது உண்மை தான். ஒரு படத்தின் விஷயங்கள் சரியாக நடக்காதபோது, அவற்றை சரி செய்வது தயாரிப்பாளரின் பொறுப்பு. அந்த பழியை ஏற்றுக் கொள்கிறேன். ’கேம் சேஞ்சர்’ மாதிரியான ஒரு படத்தின் திட்டத்துக்கு முதலில் பச்சைக் கொடி காட்டியிருக்கக் கூடாது.” என்று தெரிவித்துள்ளார் தில் ராஜு.

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், கியாரா அத்வானி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கேம் சேஞ்சர்’. இதன் கதையினை கார்த்திக் சுப்பராஜ் எழுதியிருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் பெரும் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT