தென்னிந்திய சினிமா

‘சை ரா நரசிம்ம ரெட்டி’யில் இணைந்த நான் ஈ சுதீப்

செய்திப்பிரிவு

 சிரஞ்சீவியின் ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் படப்பிடிப்பில் 'நான் ஈ' சுதீப் இணைந்துள்ளார்.

சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘சை ரா நரசிம்ம ரெட்டி’. ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது.

நரசிம்ம ரெட்டி வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். அவருடைய 151-வது படமான இதை, ராம் சரண் தயாரிக்கிறார். சிரஞ்சீவி ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விஜய் சேதுபதி, தமன்னா, 'நான் ஈ' சுதீப், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கெஸ்ட் ரோலில் அமிதாப் பச்சன் நடிக்கிறார்.

சிரஞ்சீவி - நயன்தாரா திருமணக் காட்சி ஏற்கெனவே படமாக்கப்பட்டது. அந்தக் காட்சியில்தான் அமிதாப் பச்சன் கெஸ்ட் ரோலில் நடித்தார். இந்நிலையில், 'நான் ஈ' சுதீப் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். “வழக்கமான இடைவெளிகளில் சினிமா எப்போதுமே ஆச்சரியத்தைத் தந்து கொண்டிருக்கிறது. சுரேந்தர் ரெட்டி சார் இயக்கத்தில் சிரஞ்சீவி சாருடன் ‘சை ரா’ படத்தில் நடிக்கிறேன். நான் நடிக்கும் முதல் வரலாற்றுப் படம் இது” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் 'நான் ஈ' சுதீப்.

ரத்னவேலு ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படம், தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தியில் உருவாகி வருகிறது. ‘பாகுபலி’க்குப் பிறகு அதிக பட்ஜெட்டில் உருவாகும் தெலுங்குப் படம் இதுதான் என்கிறார்கள். 240 கோடி ரூபாயில் இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT