தென்னிந்திய சினிமா

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுப்பு - ‘தக் லைஃப்’ வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

செய்திப்பிரிவு

பெங்களூரு: கன்னடம் குறித்து தான் கூறிய கருத்துக்கு மன்னிப்புக் கோர நடிகர் கமல்ஹாசன் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அதேவேளையில், கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படத்தின் வெளியீடு நிறுத்தி வைக்கப்படுவதாக அம்மாநில உயர் நீதிமன்றத்தில் கமல்ஹாசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 5-ல் வெளியாகவுள்ள ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளி​யீட்டு விழா​வில் பேசிய நடிகரும், மக்​கள் நீதி மய்​யத்​தின் தலை​வரு​மான கமல்​ஹாசன், “தமிழில் இருந்து கன்​னடம் பிறந்​தது” என குறிப்​பிட்​டார். இதற்கு கன்னட அமைப்​பினர் கடும் எதிர்ப்பு தெரி​வித்து அவருக்கு எதி​ராகப் போராட்​டங்​களில் குதித்​துள்​ளனர். கர்​நாடக முதல்​வர் சித்தராமை​யா, பாஜக மாநில தலை​வர் விஜயேந்​திரா உள்​ளிட்​டோரும் கண்​டனம் தெரி​வித்​தனர்.

இதையடுத்து கன்னட கலை மற்​றும் கலாச்​சா​ரத் துறை அமைச்​சர் சிவ​ராஜ் தங்​கடகி, “கமல்​ஹாசனின் கருத்​தால் கன்னட மக்​களின் மனம் புண்​பட்​டுள்​ளது. இதற்​காக அவர் மன்​னிப்பு கேட்​கா​விட்​டால் அவரின் படத்​தைக் கர்​நாட​கா​வில் தடை செய்​வோம்” எனத் தெரி​வித்​தார். ஆனால் கமல்​ஹாசன், “நான் எந்த தவறும் செய்​ய​வில்​லை. எனவே மன்​னிப்பு கேட்க மாட்​டேன்” என பதிலளித்​தார். இது குறித்து கர்​நாடக திரைப்பட வர்த்தக சபை தலை​வர் நரசிம்​மலு கூறுகை​யில், “கமல்​ஹாசனின் வழக்கை சட்​டப்​படி எதிர்​கொள்​வோம். கர்நாடகா​வில் எந்த திரையரங்​கிலும் கமல்​ஹாசனின் படங்​களைத்​ திரை​யிட​மாட்​டோம்​” என்​றார்​.

இதன் தொடர்ச்சியாக, கமல்​ஹாசன் தனது தயாரிப்பு நிறு​வன​மான ராஜ்கமல் ஃபிலிம் இன்​டர்​நேஷனல் சார்​பில் கர்​நாடக உயர் ​நீ​தி​மன்​றத்​தில் அவசர மனு ஒன்றை நேற்று தாக்​கல் செய்​தார். அதில், “கர்​நாட​கா​வில் தக் லைஃப் படத்​தைத் திரை​யிட தடை விதித்​திருப்​பது சட்​டத்​துக்கு எதி​ரானது. எனவே, தடையை நீக்​கி, திரை​யிட அனு​ம​திக்க வேண்​டும். திரையரங்​கங்​களுக்கு போதிய போலீஸ் பாது​காப்பு வழங்​கு​மாறு கர்​நாடக அரசுக்​கும், போலீஸுக்​கும்​ உரிய வழி​காட்​டு​தல்​களை வழங்க வேண்​டும்” என முறை​யிட்​டார்.

இந்த வழக்கை இன்று (ஜூன் 3) விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ‘கருத்துச் சுதந்திரத்தின் பெயரால் மற்றவர்களின் உணர்வுகளைக் காயப்படுத்துவதை அனுமதிக்க முடியாது. கர்நாடகா மக்கள் மன்னிப்பை மட்டுமே கேட்கிறார்கள். கமல்ஹாசன் தனது கருத்துக்காக மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தது.

மேலும், “கர்நாடகா மக்கள் மன்னிப்பை மட்டுமே கேட்கிறார்கள். தற்போது நீங்கள் பாதுகாப்புத் தேடி இங்கே வந்திருக்கிறீர்கள். தற்போதைய சூழ்நிலை கமல்ஹாசனால் உருவாக்கப்பட்டது. மேலும், அவர் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியுள்ளார். நீங்கள் கர்நாடக மக்களின் உணர்வுகளை குறைத்து மதிப்பிட்டுள்ளீர்கள். எந்த அடிப்படையில் இதைச் செய்தீர்கள்? நீங்கள் வரலாற்றாய்வாளரா அல்லது மொழியியல் அறிஞரா?

கருத்துச் சுதந்திரம் மக்களின் மனதினைப் புண்படுத்துவதற்காக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. மன்னிப்புக் கேளுங்கள், அதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை. நீங்கள் கர்நாடகாவிலிருந்தும் சில கோடிகளை சம்பாதிக்க விரும்புகிறீர்கள்” என்று நீதிபதி தெரிவித்தார்.

பின்பு நடந்த வழக்கு விசாரணையின்போது கமல்ஹாசன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தியான் சின்னப்பா, கர்நாடகா திரைப்பட வர்த்தக சபைக்கு கமல்ஹாசன் அனுப்பிய கடிதத்தை நீதிமன்றத்திலும் சமர்ப்பித்தார். அப்போது இந்தக் கடிதம், கன்னட மொழி மற்றும் கர்நாடக மக்கள் மீதான உண்மையான அன்பின் வெளிப்பாட்டைக் கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அந்தக் கடிதத்தில் கமல்ஹாசன் “புகழ்பெற்ற டாக்டர் ராஜ்குமாரின் குடும்பத்தினர், குறிப்பாக சிவராஜ்குமார் மீது உண்மையான பாசத்துடன் ‘தக் லைஃப்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் கூறியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது எனக்கு வேதனை அளிக்கிறது. கன்னட மொழியின் வளமான பாரம்பரியத்தில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தமிழைப் போலவே, கன்னடமும் நான் நீண்ட காலமாகப் போற்றும் பெருமைமிக்க இலக்கியம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.

சினிமா என்பது மக்களுக்கு இடையே ஒரு பாலமாக இருக்க வேண்டும். ஒருபோதும் அவர்களைப் பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது. இதுவே எனது இந்த அறிக்கையின் நோக்கம். பொது அமைதியின்மை மற்றும் விரோததுக்கு நான் ஒருபோதும் இடம் கொடுத்ததில்லை. அதனை நான் ஒருபோதும் விரும்புவதில்லை. எனது வார்த்தைகள், அவற்றுக்கான நோக்கம் கொண்ட உணர்வில் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், கர்நாடகா, அதன் மக்கள் மற்றும் அவர்களின் மொழி மீதான எனது நீடித்த பாசம் அதன் உண்மையான வெளிச்சத்தில் அங்கீகரிக்கப்படும் என்றும் நான் மனதார நம்புகிறேன்” என்று தெரவித்திருந்தார்.

இதனைக் கேட்ட கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி, ‘கடிதத்தின் அனைத்து அம்சங்களும் சிறப்பாக உள்ளது. ஆனால், ஒரு வார்த்தை மட்டும் இடம்பெறவில்லை. மன்னிப்பு இடம்பெறவில்லை’ என்று தெரிவித்தது.

அதற்கு பதில் அளித்த கமல் தரப்பு வழக்கறிஞர், “ஒரு பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய பேச்சு, இந்த அளவுக்கு வந்துள்ளது. மொழி மீதான தனது அன்பை கமல்ஹாசன் உண்மையாக வெளிப்படுத்தியுள்ளார். அதனை நாம் பாராட்ட வேண்டும். தீமையாக இருந்தால்தான் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த விஷயத்தில் தீமை எதுவும் இல்லை” என்று தெரிவித்தார். இதற்கு ‘நடிகர் கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்காமல் ஈகோவில் இருக்கிறார். மக்களின் உணர்வுகள்தான் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது’ நீதிபதி கூறினார்.

நீதிமன்றத்தின் அவதானிப்புக்கு பதில் அளித்த வழக்கறிஞர் தியான், “இது ஈகோ இல்லை. விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு மொழியை அவமதிக்கும் நோக்கம் இல்லை” என்று தெரிவித்தார். ‘அப்படியென்றால் மன்னிப்புக் கேட்டு இந்த விஷயத்தை முடித்து வைத்தால் என்ன? அவரின் விளக்கம் ஒரு நியாயப்படுத்தலைப் போல உள்ளது’ என்று நீதிபதி கூறினார்.

அதன்பின், “கமல்ஹாசன் சொல்ல வேண்டிய அனைத்தையும் தெரிவித்துவிட்டார். நிலைமை இப்படியே தொடர்ந்தால், அவர் கர்நாடகாவில் தனது படத்தை வெளியிட விரும்பவில்லை” என்று வழக்கறிஞர் தியான் வாதத்தை முடித்துக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, மனுதாரர் தனது படத்தை தற்போது கர்நாடகாவில் வெளியிட விரும்பவில்லை என்பதை பதிவு செய்து கொண்ட கர்நாடக உயர் நீதிமன்றம், அனைத்து தரப்பினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் வரை வழக்கை ஒத்திவைக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

SCROLL FOR NEXT