ராஜமவுலி படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் வெளியானது குறித்து பிருத்விராஜ் காட்டமாக பதிலளித்துள்ளார்.
ஓடிசாவில் ராஜமவுலி படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதில் மகேஷ் பாபு மற்றும் பிருத்விராஜ் இடம்பெற்றிருந்தார்கள். தற்போது ‘எம்புரான்’ படத்தினை விளம்பரப்படுத்தி வருகிறார் பிருத்விராஜ். அவரிடம் ராஜமவுலி படப்பிடிப்பு காட்சிகள் வெளியானது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, “இணையத்தில் வெளியான காட்சிகளை மக்கள் ஏன் அவசரமாகப் பார்க்கிறார்கள் என புரியவில்லை. அதில் எந்தவொரு புதிய விஷயமும் இல்லை. ஒரு பெரிய படத்தின் வீடியோவைப் பார்க்கும் போது, நீங்கள் செய்வதெல்லாம் அந்த அனுபவத்தை நீங்கள் கொல்வது மட்டுமே. அக்காட்சிகளைப் பார்ப்பதால் எந்தப் பலனும் கிடைக்காது. அவற்றைப் பார்ப்பதால் பெரிய திரையில் அதைப் பார்க்கும் போது எதிர்பார்ப்பை இழப்பது மட்டுமே” என்று காட்டமாக பதிலளித்துள்ளார் பிருத்விராஜ்.
மேலும், “ராஜமவுலி படத்தை ஒப்புக்கொண்டு ஒரு வருடத்துக்கும் மேலாகிவிட்டது.” என்றும் குறிப்பிட்டுள்ளார் பிருத்விராஜ். இந்தப் பேட்டியின் மூலம் ராஜமவுலி படத்தில் நடித்து வருவதை முதன்முறையாக அறிவித்துள்ளார் பிருத்விராஜ். ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபு, பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்தியாவில் அதிகப் பொருட்செலவில் தயாராகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 2027-ம் ஆண்டு இப்படம் வெளியாகவுள்ளது.