‘கேம் சேஞ்சர்’ இன்னும் நன்றாக பண்ணியிருக்கலாம் என்று இயக்குநர் ஷங்கர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. அதுமட்டுமன்றி படத்தின் HD PRINT இணையத்தில் வெளியாகி படக்குழுவினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் படத்தின் வசூலும் பாதிக்கப்பட்டது.
தற்போது இயக்குநர் ஷங்கர் அளித்துள்ள பேட்டியில் “அனைத்து இயக்குநர்களுக்கும் என்ன செய்தாலும் திருப்தி வராது. ‘கேம் சேஞ்சர்’ இன்னும் நன்றாக பண்ணியிருக்கலாம் என்ற எண்ணம் இருக்கிறது. படத்தின் நீளத்தைக் குறைக்க நிறைய நல்ல காட்சிகளை தூக்கிவிட்டோம்.
படத்தில் அவ்வளவு காட்சிகளையும் வைக்க முடியாது. ஆனால், அவை அனைத்துமே இந்தக் கதைக்குள் தான் வருகிறது. மொத்தமாக 5 மணி நேரக் காட்சிகள் இருந்தது” என்று தெரிவித்துள்ளார். ஷங்கரின் இந்தப் பேச்சு இணையவாசிகள் மத்தியில் கடும் எதிர்வினைகளை பெற்று வருகிறது.
தில் ராஜு தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘கேம் சேஞ்சர்’. ராம்சரண், எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், கைரா அத்வானி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்தின் ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக தமன் ஆகியோர் பணிபுரிந்திருந்தனர்.