தென்னிந்திய சினிமா

‘கேம் சேஞ்சர்’ பட பட்ஜெட்: எஸ்.ஜே.சூர்யா வியப்பு

ஸ்டார்க்கர்

‘கேம் சேஞ்சர்’ படத்தின் பொருட்செலவினைக் குறிப்பிட்டு எஸ்.ஜே.சூர்யா ஆச்சரியப்பட்டு பேசியிருக்கிறார்.

‘கேம் சேஞ்சர்’ படத்தில் ராம்சரணுக்கு வில்லனாக நடித்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. ட்ரெய்லரில் அவரது கெட்டப் மாற்றம், வசன உச்சரிப்பு உள்ளிட்ட அனைத்துக்குமே பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. தனது நடிப்பு மற்றும் படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா அளித்துள்ள பேட்டியில், “கேம் சேஞ்சர் படம் சுமார்ட் 400-500 கோடியில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் வட்டி எல்லாம் கணக்குப் போட்டால் எங்கேயோ இருக்கிறது. தில் ராஜு சாருக்கு ஷங்கர் சார் என்றால் ரொம்ப பிரியம்.

‘ஜருகண்டி’ பாடல் இணையத்தில் லீக்காகி விட்டதால், உடனடியாக லிரிக்கல் வீடியோ வடிவில் வெளியிட்டுவிட்டார்கள். நேற்றுதான் அப்பாடல் வீடியோ வடிவம் பார்த்தேன். ரசிகர்கள் கொடுக்கும் காசு அப்பாடலுக்கே சரியாகி போய்விடும். அப்பாடலில் ராம்சரணை கொண்டாடுவார்கள். கைரா அத்வானிக்கு என்ன சம்பளம் கொடுத்தார்களோ அது அப்பாடலுக்கே முடிந்துவிட்டது. மக்கள் கொடுக்கும் பணத்துக்கு அப்பாடலைத் தாண்டி மற்றவை அனைத்துமே போனஸ் தான்” என்று பேசியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், கைரா அத்வானி, அஞ்சலி, சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கேம் சேஞ்சர்’. தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக தமன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். ஜனவரி 10-ம் தேதி உலகமெங்கும் இப்படம் வெளியாகவுள்ளது.

SCROLL FOR NEXT