சென்னை: “அல்லு அர்ஜுன் நேரடியான தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. என்னுடைய இயக்கத்தில் நடிப்பாரா என்பது குறித்து அவர் தான் பதில் சொல்ல வேண்டும்” என இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தெரிவித்துள்ளார்.
அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் மேடையில் பேசிய இயக்குநர் நெல்சன், “நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ஸ்டார் நடிகரை புதிதாக பார்ப்பது போன்ற உணர்வை ‘புஷ்பா’ முதல் பாகம் கொடுத்தது. பெரிய ஹிட்டுக்குப் பிறகு அல்லு அர்ஜுன் 3 ஆண்டுகளாக எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. யாராக இருந்தாலும் அடுத்தடுத்த படங்களில் நடிப்பார்கள்.
ஆனால், சினிமாவை நேசிக்கும் ஒருவராக அல்லு அர்ஜுன் புஷ்பா 2-ம் பாகத்துக்காக எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை. அவரிடம் பேசும்போதே அவர் சினிமாவை எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடியும். ‘புஷ்பா 2’ படத்தை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். ‘புஷ்பா’வாக இருக்கட்டும் ‘அனிமல்’ படமாக இருக்கட்டும் நாயகர்களுக்கு டஃப் கொடுக்கும் நடிப்பை ராஷ்மிகா வெளிப்படுத்தி வருகிறார். அவர்களுக்கு வாழ்த்துகள்” என்றார்.
இருவரும் இணைந்து படம் பண்ணுவீர்களா என நெல்சனிடம் கேட்டபோது, “அந்தக் கேள்விக்கு அல்லு அர்ஜுன் தான் பதில் சொல்ல வேண்டும். அவர் நேரடியான தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அவருக்கு தமிழ் தெரியாது என நினைத்திருந்தேன். அவர் சரளமாக தமிழ் பேசக்கூடியவர் என்பது அவரிடம் பேசும்போது தான் தெரிந்தது. அவர் நினைத்தால் நேரடியான தமிழ்ப் படத்தை தமிழ் மொழியில் பேசியே நடிக்க முடியும்” என்றார். இதற்கு அல்லு அர்ஜுன் தம்ஸ் அப் காட்டி ஓகே என சொன்னது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.